‘தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award)’ இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் ‘தாதாசாகெப் பால்கே’ அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2019 ஆண்டுக்கான ‘தாதாசாகெப் பால்கே’ விருதுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், திரையுலகில் தன்னை ஆளாக்கியவர்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசிற்கும் மற்றும் தனக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் மிக உயிரிய தாதா சாஹேப் பால்கே விருதுஎனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பிரதமர் மோடிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னில் இருந்த நடிப்பு திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு பாலசந்தர், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கான தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன். என்னை மனமார்ந்து வாழ்த்திய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com