1.பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுக சகவாசம்! -அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, ஜி.எஸ்.டி பிரச்சனை, நீட் தேர்வு குளறுபடி, புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு; அதைத் தொடர்ந்து நடைப்பெற்று வரும் விவசாயிகள் போராட்டம், தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தியது. மேலும், தனது ஆட்சி, அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக, மத்திய அரசிடம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து வருவதாக எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர் கட்சிகள் முன் வைத்த தொடர் பிரசாரம்…! இப்படி அதிமுக தோல்விக்கு ஆயிரம் காரணங்களை அடுக்கிக் (சொல்லி) கொண்டே போகலாம் என்றாலும், ஆனால், அது மட்டுமே முழு காரணமல்ல; அதுவும் ஒரு காரணம் அவ்ளவுதான். ஆம், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் மீது, தமிழக மக்களுக்கு இருந்த அதிருப்தி, விரக்தி, கோபம் அனைத்தும் அதிமுக தோல்விக்கு ஒரு அடிப்படை காரணமாக அமைந்து விட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை.
ஆனால், அதையும் தாண்டி பல முக்கிய காரணங்கள் இருக்கிறது..!
2.தமிழக முழுவதும் வாக்கு வங்கி இல்லாத; தேர்தல் களப்பணியாற்ற தொண்டர்கள், நிர்வாகிகள் இல்லாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி.
அதிமுக தலைமை பாரதிய ஜனதா கட்சியையோடு இணைந்துதான் தேர்தலை சந்திக்கும் என்பதை முன் கூட்டியே உறுதியாக தெரிந்துக்கொண்ட, பாரதிய ஜனதா கட்சியோடு கொள்கை ரீதியாக முரண்பட்ட சில சிறிய அரசியல் கட்சிகள், அதிமுக கூட்டணியில் சேர விருப்பம் இருந்தும்; வாய்ப்பு இல்லாத காரணத்தால், தொகுதி எண்ணிக்கை குறைவாக கிடைத்தபோதும், வேறு வழியில்லாமல் எதிர் (திமுக) முகாம்லேயே தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டனர். அதிமுக கூட்டணிக்கு மற்ற அரசியல் கட்சிகள் வராததற்கு இதுதான் முக்கிய காரணம்.
3.வேட்பாளர்கள் தேர்வில் அதிமுக தலைமை கடுகளவும் கவனம் செலுத்தவில்லை.
கட்டுச் சாதத்தை பங்கு போட்ட கதையாக ஓபிஎஸ்க்கு இத்தனை தொகுதி; இபிஎஸ்க்கு இத்தனை தொகுதி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இத்தனை தொகுதி என்றுதான் பிரித்துக் கொண்டார்களே தவிர; உண்மையிலுமே கட்சியில் கொள்கை பிடிப்புள்ள; மக்கள் செல்வாக்கு உள்ள பல நல்ல மனிதர்களுக்கு இந்த தேர்தலில் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்பதை இங்கு நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். வேட்பாளர்கள் தேர்வில் அதிமுக தலைமை கடுகளவும் கவனம் செலுத்தவில்லை.
இதனால் பல இடங்களில் அதிமுக அநியாயமாக வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று 10.03.2021 அன்றே “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் எச்சரித்து நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். கீழ்காணும் இணைப்பை பார்வையிட்டாலே இந்த உண்மை தெரியும்.
http://தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்!
http://www.ullatchithagaval.com/2021/03/10/54783/
இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா அவர்களால், கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்ட; கண்டுகொள்ளாமல் விடப்பட்ட; ஓரங்கட்டப்பட்ட; புறக்கணிக்கப்பட்ட; அவ்வளவு ஏன்? கட்சியில் இருந்தே நீக்கப்பட்ட பல நபர்களுக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மந்திரிகளையும்; மாவட்ட செயலாளர்களையும் முழுமையாக நம்பியதின் விளைவுதான், அதிமுகவிற்கு இந்த அநியாயமான தோல்வி என்பதை இங்கு நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
மேலும், அதிமுக பிரபலங்கள் போட்டியிட்ட ஒரு சில தொகுதிகளை தவிர; மற்றத் தொகுதிகளில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பணம், அதிமுக ஏழைத் தொண்டனுக்குகூட முழுமையாக சென்று சேரவில்லை. இதை நாம் நிரூப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை!-ஏனென்றால், கை புண்ணிற்கு எந்த கண்ணாடியும் தேவையில்லை?!
4.கோஷ்டி மோதல் மற்றும் துரோகம்.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி; இபிஎஸ் அணி; ஆர். வைத்திலிங்கம் அணி; பாஜக ஆதரவு அணி; சசிகலா மற்றும் தினகரன் ஆதரவு நிலைப்பாடு ..!-இப்படி பல்வேறு பிரிவுகள் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை மனசாட்சியுள்ள எந்த அதிமுக தொண்டனும் மறுக்கமாட்டான்.
இவர்களில் பெரும்பாலனோர் அதிமுக தோற்றாலும் பரவாயில்லை; மறுபடியும் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக ஆகிவிடக் கூடாது என்பதில், மிகத் தெளிவாக இருந்தார்கள்!-அதற்காக உள் இருந்தும்; வெளியில் இருந்தும் பல பேர் மெனக்கெட்டார்கள்; கூட இருந்தே பல பேர் குழியும் பறித்தார்கள். பல பேர் உறவாடியும் கெடுத்தார்கள்; ஆம், மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற அலர்களின் நோக்கம், இத்தேர்தலில் முழுமையாக நிறைவேறிவிட்டது.
இதில் எதிரிகளின் பங்கை விட; துரோகிகளின் பங்குதான் அதிகம் என்பதை இங்கு நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இதில் எடப்பாடி கே.பழனிசாமி பெரிதும் நம்பிய, தேர்தலை தொழிலாக கருதி செயல்படும் ஒரு கம்பெனியும் அடக்கம் என்பதை நினைக்கும்போது, உண்மையிலுமே நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
எல்லோரும் வேலிக்குதான் முள் தேடுவார்கள்; ஆனால், தன் காலுக்கு முள் தேடிய பெருமை எடப்பாடி கே.பழனிசாமிக்கு மட்டும்தான் பொருந்தும்.
5. ஊடக (நாளிதழ்) அதிபர்களும், விஷமத்தனமான பிரசாரங்களும்.
வாக்கு பதிவுக்கு முன்பு அதாவது தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 4-ந்தேதி அன்று, தமிழ்நாட்டில் வெளியாகும் முக்கிய நாளிதழ்கள் அனைத்திலும், முதல் நான்கு பக்கங்களில் கடந்த கால திமுக ஆட்சி குறித்து, அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட செய்தி வடிவிலான விளம்பரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியலுக்கு அப்பாற்பட்ட பொது மக்கள் மற்றும் அதிமுக தொண்டன் உள்பட இதை யாரும் ரசிக்கவில்லை. ஏனென்றால், கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சி, அதிகாரத்தில் இருப்பது அ.தி.மு.க., இன்னும் சொல்ல போனால் ஜெ.ஜெயலலிதா மர்ம மறைவிற்கு பிறகு, மத்திய அரசுடன் அ.தி.மு.க மிக நெருக்கமாகவும்; இணக்கமாகவும் இருந்து வருகிறது. அப்படியானால், கடந்த கால திமுக ஆட்சியில் நடைப்பெற்ற சட்ட விரோத சம்பவங்களுக்கு, சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து இருக்கலாமே?! அப்படிப்பட்ட வழக்குகளை அ.தி.மு.க அரசு துரிதப்படுத்தி இருக்கலாமே?! அதை விட்டு விட்டு, தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான ஏப்ரல் 4-ந்தேதி, தி.மு.க குறித்து நாளிதழ்கள் மூலம் பொது வெளியில் செய்தி வடிவிலான விளம்பரங்கள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?!
எடப்பாடி கே.பழனிசாமி தாய் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்தல் பிரசாரம் செய்தது எப்படி எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுதாபத்தைப் பெற்று தந்ததோ, அதேபோல், திமுக ஆட்சி குறித்து அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட செய்தி வடிவிலான விளம்பரங்கள் திமுக வெற்றிக்கு துணை புரிந்தது.
இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து உடனே நாம் அப்போது செய்தி வெளியிட்டு இருந்தோம். கீழ்காணும் இணைப்பை பார்வையிட்டாலே தெரியும்.
http://www.ullatchithagaval.com/2021/04/05/55614/ நான்காவது தூணின் லட்சணங்கள்…!- தவறு செய்வது பெற்றத் தாயாக இருந்தாலும் அதை தயங்காமல் சுட்டிக் காட்டுவோம்..!
http://www.ullatchithagaval.com/2021/03/27/55334/ “யாகாவராயினும் நாகாக்க” -ராஜாவுக்கு மட்டுமல்ல! அமைச்சர்கள், தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் ‘நாவடக்கம்’ தேவை!
இந்த ஊடக விளம்பரத்திற்கு செலவிட்ட பணத்தை; தமிழகம் முழுவதும் உள்ள இலட்சக் கணக்கனான அதிமுக அப்பாவி தொண்டர்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால், எடப்பாடி கே.பழனிசாமிக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
அதெல்லாம் சரிதான், இத்தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் குறைந்து இருக்கிறதே தவிர, அதிமுக வாக்கு சதவீதம் பெருமளவில் குறையவில்லையே?! அது எப்படி?!
அதற்கு முக்கிய காரணம், அதிமுகவின் கவர்ச்சிகரமானத் தேர்தல் அறிக்கையும், எடப்பாடி கே.பழனிசாமியின் கடுமையான தேர்தல் பிரசாரமும் தான் காரணம். மேலும், அதிமுக – பாஜக கூட்டணியின் எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தும், திமுக கூட்டணி கட்சிகளுக்கு முழுமையாக வராமல், அவற்றின் ஒரு பகுதி நாம் தமிழர் கட்சிக்கும், மக்கள் நீதி மய்ய கட்சிக்கும், மற்றும் அமமுக கட்சிக்கும் சிதறியது.
மேலும், எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்து, அதிமுகவில் உள்ள அனைவரும் நேர்மையாக தேர்தல் பணியாற்றி இருந்தால், இந்த தேர்தல் முடிவு, நிச்சயம் வேறு மாதிரியாகதான் இருந்திருக்கும்.
என்ன செய்வது? விதி யாரை விட்டது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
மிக சரியாக சொன்னீங்க சார்……