மே 4-ந்தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தமிழக தேர்தல் முடிவுகளை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார்.
அன்று மாலை, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடந்தது. அதில், தி.மு.க.சட்டசபை கட்சி தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மே.5-ந்தேதி காலை 10:30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது அவருடன் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
தி.மு.க. சட்டசபை கட்சி தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை தொடர்ந்து, அவரை ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார். அதற்கான கடிதத்தை ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்நிலையில், நாளை (மே 07) காலை 9:00 மணிக்கு, சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்க உள்ளனர்.
-எஸ்.திவ்யா, கே.பி.சுகுமார்,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com