‘யாஸ்’ புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி, வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று, இந்திய வானிலை துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம், இன்று (25.05.2021) காலை 9.10 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
‘யாஸ்’ அதி தீவிர புயல், புதன்கிழமை (26.05.2021) அதிகாலையில், வடக்கு ஒடிசா, மேற்கு வங்க கரையோரமாக, சந்த்பலி-தம்ரா துறைமுகத்திற்கு அருகே சென்றடையும் என்றும், பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, பாலசோர் அருகே இது மே 26ம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஆந்திராவின் வடக்கு கடலோரப் பகுதியில் இன்று ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை, அதிகன மழை பெய்யும். ஒடிசா கடலோரப் பகுதியில் பல இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பூரி, ஜகத்சிங்பூர், குர்தா, கட்டாக், கேந்திரபாரா, ஜெய்பூர், பத்ரக், பாலாசோர் உட்பட பல மாவட்டங்களில் இன்று கன மழையும், அதிகன மழையும் பெய்யும். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இன்று பல இடங்களில் கன மழையும், அதிகன மழையும் பெய்யும்.
மத்திய வங்கக் கடலின் பல பகுதிகளில் மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிக்காக இதுவரை தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 112 குழுக்கள் சம்மந்தப்பட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனே பத்திரமாக கரைக்கு திரும்புமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, இந்திய கடலோர காவல் படை மேற்கொண்டு வருகிறது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com