தமிழ்நாட்டில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறதாம்!-பெரிய மனிதர்; ஆனால், சின்ன புத்தி!-சுப்ரமணியன் சுவாமியின் சூழ்ச்சி.

சுப்ரமணியன் சுவாமி.

தமிழகத்தில், தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஆதரவு காரணமாக, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிராமணர்களை குறி வைப்பதும், அவர்கள் மீது வார்த்தை தீவிரவாத தாக்குதல் நடத்துவதும், ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசின், துவக்க கால நிகழ்வை ஒத்திருக்கிறது. தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் பூசாரிகள் குறி வைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் பிராமணர்கள்.

தமிழகத்தில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழல் குறித்து, நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த பதட்டமான சூழல் ஏற்பட, திராவிட கழகம், தி.மு.க.,வில் உள்ள சிலர் மற்றும் விடுதலை புலி ஆதரவாளர்கள் காரணம்.

புதிய அரசு பொறுப்பேற்று, தன் பணியை துவக்கும் ஆரம்ப நிலையில், இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டப்பிரிவு, 356ஐ பயன்படுத்த வேண்டும் எனக்கூற இயலவில்லை; எனினும், இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

எனவே, தமிழக அரசின் தலைமை செயலரை அழைத்து, பிராமணர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என, அறிக்கை கேட்க வேண்டும். அவரை ஆலோசித்து, அந்த அறிக்கை மீது, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நீங்கள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எழுதிய தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

xxxxxx

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.அரசு பொறுப்பேற்று 20 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், சுப்ரமணியன் சுவாமி தமது வழக்கமான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். தமிழ்நாட்டை ஒரு பதட்டமான மாநிலமாக சித்தரிக்க முயற்சித்து வருகிறார்.

முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் கலைஞர் மு.கருணாநிதி, செல்வி ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வரிசையில், தற்போது மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்.

அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், எத்தனையோ முரண்பாடுகள், விமர்சனங்கள் இவர்களுக்குள் இருந்தாலும், இந்தியாவை பொருத்தவரை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான மாநிலமாகதான் இன்று வரை இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அந்தவகையில் மேற்காணும் முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் ஆட்சியோடு, தற்போது கடந்த 20 நாட்களாக நடைப்பெற்று வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்பிடும்போது, மிக சிறப்பான திசையைநோக்கி இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், முந்தைய கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக்கும், தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கும் உண்மையிலுமே நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

கடந்த காலங்களில் நடைப்பெற்ற எந்த தவறுகளும், தமது தலைமையிலான ஆட்சியில் நடைப்பெற்று விடக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பில் எத்தனை நாட்கள்; எத்தனை மாதங்கள்; எத்தனை ஆண்டுகள் இருகின்றோம் என்பது முக்கியமல்ல; தாம் இருக்கும்வரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் மிக தெளிவாகவே இருக்கிறார்.

அதற்கு இடையூறாக அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சி, குடும்பம், உறவினர்கள், நண்பர்கள்… இப்படி யார்; எது குறுக்கே வந்தாலும் அதை தூக்கி வீசுவதற்கும் மு.க.ஸ்டாலின் தயங்கமாட்டார்.

இப்போது நீங்கள் பார்ப்பது பழைய ஸ்டாலின் அல்ல!-இன்னும் சுப்ரமணியன் சுவாமிக்கு புரிய மாதிரி சொல்ல வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் புது அவதாரம் எடுத்துள்ளார்.

எனவே, சுப்ரமணியன் சுவாமியின் வழக்கமான புருடா; இங்கு மு.க.ஸ்டாலினிடம் செல்லுபடி ஆகாது.

இன்று பிராமணர்களுக்காக பரிந்து பேசி, போலியாக நீலி கண்ணீர் வடிக்கும் சுப்ரமணியன் சுவாமி; அன்று காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் கோவிலில் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனுக்காகவும்; அவரது குடும்பத்தினருக்காகவும் என்ன செய்தார்?! என்பதை இந்த உலகமும், உண்மையான பிராமணர்களும் நன்கு அறிவார்கள்.

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியோடும், தி.மு.க கட்சி தலைமையோடும் சுப்ரமணியன் சுவாமிக்கு ஏதாவது
கொடுக்கல், வாங்கல் இருந்தாலோ (அல்லது) கொள்கை ரீதியான மோதல்கள் இருந்தாலோ, அதை தனியாக பார்த்துக் கொள்ளவேண்டுமே தவிர; அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தமிழக அரசை
கலைப்பேன் என்று மிரட்டுவது; ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

சுப்ரமணியன் சுவாமி இனியாவது தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply