‘மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்தால்தான் மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டுவரமுடியும்’ என பகிரங்கமாக சொன்னவர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி. எப்போதெல்லாம் ஆளும் கட்சியாக திமுக இருக்குமோ அப்போதெல்லாம் இதை சொல்வது அவரின் வழக்கம்.
கருணாநிதியையும், அவரின் போதனைகளையும் இப்போதுள்ள திமுகவோ, அதன் நிதியமைச்சரோ சுத்தமாக மறந்தே விட்டனர் என்பது தெரிகிறது. இதை அமைச்சர்களுக்கு அறிவுறுத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மேற்காணும் அறிக்கை மூலம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை என எடுத்துரையுங்கள் எனவும், அந்த அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சி…!
xxxxxxx
ஏதோ வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த விருந்தாளியைப் போல, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டு இருப்பது, உண்மையிலுமே வருத்தமாகவும், வேதனையாகவும், அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
இவ்விசியத்தில், தமிழக அரசிற்கு எதிராக உண்மையிலுமே அரசியல் செய்ய வேண்டிய தமிழக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூட; தமிழ்நாட்டிற்கு ரெம்டெசிவிர் மருந்தையும்; கொரோனா தடுப்பு ஊசிகளையும்; மருத்துவ ஆக்ஸிஜனையும் மற்றும் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளையும் உடனே தமிழ்நாட்டிற்கு அனுப்பி வையுங்கள் என, பிரதமர் நரேந்திர மோதிக்கு, கடந்த 26 நாட்களில் இதுவரை 2 கடிதங்களை எழுதியுள்ளதோடு, அதிமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அவரின் இத்தகைய நடவடிக்கை பக்குவப்பட்ட அரசியலை பிரதிப்பளிக்கிறது.
ஆனால், மத்தியில் ஆளுகின்ற (பாஜக) கட்சியின், தமிழ்நாட்டின் தலைவராக இருக்கும் எல்.முருகன், மிகப் பெரிய இந்த பேரிடர் காலத்தில் ஆட்சிப் பொறுப்பையேற்று இன்றுடன்(02 June 2021) 26 நாட்களை மட்டுமே கடந்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக ஆட்சி நிர்வாகத்தில் எதில் குறையை கண்டுபிடிக்கலாம் என்று கருதி ‘பூதக் கண்ணாடி (MAGNIFYING GLASS)’ கொண்டு பார்க்கத் தொடங்கியிருப்பது, இது ஆரோக்கியமான அரசியலுக்கு அடையாளம் அல்ல.
இந்த பெரும் தொற்றிலிருந்து மக்களை காக்கவும், பாதுகாப்பாக அவர்களை மீட்கவும், நலமாக இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் அந்த கடமை இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், மத்தியில் ஆளுகின்ற பாஜக கட்சியின், தமிழ்நாட்டின் தலைவராக இருக்கும் எல்.முருகனுக்கு, இதில் மிகப் பெரிய கடமையும், பங்கும் (Role) இருக்கிறது.
ஆம், மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும்; உரிமைகளையும் அவர் உடனே பெற்றுத்தர வேண்டும். அதை விட்டுவிட்டு ‘ஆகாத மனைவிக்கு கைப்பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்ற கதையாக, அறிக்கை அரசியலை மட்டுமே நடத்தி வருவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல!-எல்.முருகனின் இத்தகைய நடவடிக்கை இனியும் தொடருமேயானால், அது பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சிக்கு களங்கத்தை உண்டாக்கும்.
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், தமது அறிக்கையில் இறுதியாக குறிப்பிட்ட அதே வார்த்தைகளைதான் நானும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
‘இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை’!-தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com