இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். ஒரே நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும்.
இந்தியாவைப் பொருத்தவரை மத்திய அரசு எடுக்கும் முடிவின்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, இந்தியக் குடியரசுத் தலைவரால் மாநிலங்களில் ஆளுநர் நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள (அல்லது) மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.
ஆளுநரின் பதவிகள் மாநில அளவில் சம்பிரதாயப் பதவிகளாகவே இன்றுவரை இருந்து வருகிறது. ஆட்சியில் ஆளுநரோ; துணை நிலை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை. மாறாக இவை அம்மாநில முதலைமச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கான தகுதிகள்:
- இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- மாநில சட்ட மன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.
- வேறு எந்த அரசு பொறுப்பிலும் இருக்க கூடாது.
ஆளுநரின் முக்கிய பொறுப்புகள்:
பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது.
முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது.
அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பது.
மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பது.
சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது.
சட்டசபையை கலைப்பது (இது மரபு சார்ந்த ஒரு அதிகாரமேயன்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம்முடிவை எடுக்கமுடியாது)
மாநில அரசு கொண்டுவரும் எந்தவொரு சட்ட முன்வரைவும் (அ) சட்ட மசோதாவும், ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே சட்டமாகும். இதுவும்கூட ஒரு மரபு சார்ந்த அதிகாரமே.
ஆளுநர் பண மசோதாவைத் தவிர; வேறெந்த சட்ட மசோதாவையும் சட்டசபையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனாலும், சட்டசபை மீண்டும் அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும்.
ஆனாலும், ஆளுநர் தன் விருப்புரிமையின் அடிப்படையில் ஒரு மசோதாக்களுக்கான தன்னுடைய ஒப்புதலை வழங்காமல், அம்மசோதாவை நாட்டின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.
எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், தன் விருப்புரிமையின் அடிப்படையில் மாநில முதலமைச்சரை தேர்ந்தெடுக்கலாம்
ஆளுநர் அவசர காலத்தில் மாநில அமைச்சர்கள், முதலமைச்சரின் அறிவுரைகளை மீறி முடிவெடுக்கலாம். அவசர காலத்தில் ஆளுநரே அம்மாநிலத்தை ஆளும் பொறுப்பை வகிப்பார். மேலும், அவர் குடியரசுத்தலைவரின் உத்தரவை மாநிலத்தில் செயற்படுத்தும் ஒரு முகவர் போல அக்காலங்களில் செயல்படுவார்.
ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர் (Chancellor) ஆவார்.
ஆளுநரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்?!
அந்தந்த மாநிலங்களில் பதவி வகிக்கும் ஆளுநர்கள் அனைவரும்; அரசியலுக்கு அப்பாற்பட்டு, தனது அதிகாரத்திற்கு உட்பட்டு, நடுநிலையோடும், கண்ணியத்தோடும், மக்கள் நலனில் அக்கறையோடும், மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், அம்மாநிலத்தின் முதல் குடிமகனாகவும், இந்திய குடியரசுத் தலைவரின் பிரதி நிதியாகவும், கள்ளம் கபடமின்றி தங்கள் கடமைகளை நேர்மையாக ஆற்ற வேண்டும்.
அதேபோல, இப்படிப்பட்ட நேர்மையான ஆளுநர்களை; அந்தந்த மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு மூத்த உறுப்பினரை (தந்தையை) போல மதித்து கண்ணியத்தோடு அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும்.
இப்படி இருந்தால் மட்டுமே இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் அமைதி பூங்காவாக திகழும்.
ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் உறவு அவ்வாறு சுமூகமானதாக இல்லை என்பதுதான், தற்போதைய கவலைக்குரிய விசியமாக உள்ளது.
மேற்கு வங்கம் போன்ற ஒரு சில மாநிலங்களில், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இவர்களில் யார் பெரியவர்?! என்ற அதிகாரப் போட்டியே, அம்மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சீரழிவிற்கு காரணமாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.
எனவே, செயல்படாத ஆளுநர்களையும், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஆளுநர்களையும் அதிரடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், ஜனநாயகம் கேள்வி குறியாகிவிடும்.
இதை இந்திய குடியரசுத் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.