நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் பதில் மனுவை, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
அதில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழுவை நியமித்ததன் மூலம், மனுதாரரின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மனுவில் தெரிவிக்கவில்லை.
குழுவின் அறிக்கை, அரசின் நடவடிக்கைகள் குறித்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது; அரசியல் கட்சியை சேர்ந்த அவர்; இந்த விவகாரத்தில் பொது நலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு 84343 மனுக்கள் வரப்பெற்றுள்ளது, நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும், மாணவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மனுதாரர் ஒரு மாணவரோ, பெற்றோரோ இல்லை; அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர்; விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்தும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் நலன் சார்ந்த அரசாக இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது, குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு என்ற போர்வையில் நல்லாட்சி வழங்கும் அதிகாரத்திலும், அரசியல் சாசன அடிப்படை பணிகளிலும் தலையிடும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தில் அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும். கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஜனநாயத்தை ஒடுக்கும் முயற்சி.
தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் முறை 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்தது, 2006 ஆம் ஆண்டு முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது கிராமப்புற மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற இயலாத நிலை உள்ளதாக அரசுக்கு மனுக்கள் வந்துள்ளது.
பாடப் புத்தகங்கள், பயிற்றுவிக்கும் முறை, தேர்வு நடைமுறை, மதிப்பீடு அனைத்தும் தமிழ்நாடு கல்வி வாரியத்திற்கும், பிற கல்வி வாரியங்களுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளது. மாணவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளை எழுதிய பின்னரே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி அடைகின்றனர்.
மருத்துவப் படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை உறுதிசெய்யவும் ஒரு ஆய்வு என்பது அவசியமாவதால், இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பதை ஆராய்வதற்கு மட்டுமே இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என கூற முடியாது.
ஆய்வுக்குழு, அரசுக்கு இன்னும் அறிக்கை அளிக்காத நிலையில், மனுதாரர் கரு.நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல; எனவே, அதை தள்ளுபடி செய்ய வேண்டுமென, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (13.07.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
குழு அமைத்த தமிழக அரசின் இந்த அறிவிப்பானை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே, இந்த குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே; அதனை உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவிக்க முடியும் என, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஏ.கே.ராஜன் குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது.
நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதா? என, மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பானைக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தார்.
அரசியல் சாசனம் 162 வது பிரிவு சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றலாம். ஆனால், மத்திய – மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆய்வுக் குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும் என்றும்; ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் என தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்தார்.
இந்த வழக்கில் அரசுப் பள்ளி மாணவர்கள், பின் தங்கிய மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராகவோ இல்லை.
குழு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதை பயன்படுத்தி, பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் மத்திய அரசிடம், மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம். அதேபோல ‘நீட்’ தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம், குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது.
மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் சிறப்பான வாதங்களையும்; விளக்கங்களையும் முன்வைத்து பதில் மனு தாக்கல் செய்து; வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்களை உண்மையிலுமே பாராட்டலாம்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com