கட்டுப்பாடுகள் விதிப்பது அல்லது தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக மிகவும் கவனமாக முடிவெடுக்குமாறு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பொதுப் போக்குவரத்து இடங்கள், சந்தைகள், மலைப் பிரதேசங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் அதிகரித்துள்ள பாதிப்பு எண்ணிக்கை கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்ட நெரிசல் காணப்படும் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கொவிட் சரியான நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
விதிகளை மீறுபவர்கள் மீதும் கொவிட்-19 தொற்று பரவுவதற்குக் காரணமாக இருப்பவர்கள் மீதும் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள், அபராதங்கள் மற்றும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட் தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்கவில்லை என்று எச்சரித்த திரு பல்லா, பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொவிட் சரியான நடத்தை விதிமுறையைப் பின்பற்றுதல் ஆகிய 5 உத்திகளில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்ட நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், கொவிட் சரியான நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்குமாறும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விதிமீறல்களுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்குமாறு மாநில அரசுகள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள ஆணைகளை முறையாக அமல்படுத்தப்படுவதற்கு ஏதுவாக பொதுமக்கள் மற்றும் கள அதிகாரிகளுக்கு அதனை பரவலாகக் கொண்டு சேர்க்குமாறும் உள்துறைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
–எஸ்.சதிஸ் சர்மா.