Niv நிவ், Shalev ஷாலெவ் மற்றும் Omri ஓம்ரி என்ற நபர்களால் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு, மேற்படி நிறுவனர்களின் பெயர்களில் வரும் முதல் எழுத்தை அடிப்படையாக கொண்டு NSO (என்எஸ்ஓ) என்று பெயரிட்டார்கள். அதுதான் என்எஸ்ஓ குரூப் டெக்னாலஜிஸ் (NSO Group Technologies) என்று அழைக்கப்படும் இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நவீனத் தொழில்நுட்ப உளவாளிதான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ”பெகாசஸ் ஸ்பைவேர் (PEGASUS SPYWARE)” என்ற மென்பொருள் ஆகும்.
Apple-iPhones-were-successfully-hacked-…urveillance-tool-The-Washington-Post
NSO-clients-spying-disclosures-prompt-p…ws-across-world-_-India-_-The-Guardian
We-Care-About-Journalists-Are-Investig…gation-of-Misuse-Says-NSO-Group-Chief
இந்த ”பெகாசஸ் ஸ்பைவேர் (PEGASUS SPYWARE)” மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரின் செல்போன் தகவல் திருடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post), யுகேவின் தி கார்டியன் (The Guardian), இந்தியாவின் தி வயர் (The Wire) ஆகிய ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளதாக மேற்கோள்காட்டி, உலகம் முழுவதும் உள்ள பிற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு என்எஸ்ஓ குரூப் டெக்னாலஜிஸ் (NSO Group Technologies) குழுமம், தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இவை எந்தவொரு அடிப்படை உண்மையும் இல்லாத “அடையாளம் தெரியாத ஆதாரங்கள்” என்றும், இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் மூர்க்கத்தனமானவை என்றும், எமது நிறுவனத்தின் வளர்ச்சியை சிதைப்பதற்காவும், எமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடும், உண்மைக்கு புறம்பான இத்தகைய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடுப்பதற்கு என்எஸ்ஓ குரூப் டெக்னாலஜிஸ் (NSO Group Technologies) குழுமம் பரிசீலித்து வருகிறது.
Following-the-publication-of-the-recent…legations-presented-there.-NSO-Group
உளவுப் பார்ப்பதும்; ஒட்டுக்கேட்பதும்; ஒருவருக்கொருவர் போட்டுக் கொடுப்பதும்; கூட இருந்தே எதிரிகளிடம் காட்டிக்கொடுப்பதும், உலகத்திற்கு ஒன்றும் புதிதான விசியமல்ல; புராணக்காலம், புதிய ஏற்பாடு காலம் முதல், இன்றைய நவீனத் தொழில்நுட்ப விஞ்ஞான காலம் வரை, அன்றாடம் நடைப்பெற்றுவரும் வழக்கமான நடைமுறைதான். இதில் ஆச்சர்யப்படவோ; அதிர்ச்சியடைவோ ஒன்றுமில்லை.
நாட்டுக்கு நாடு உளவு பார்த்த நிலமை முன்னேறி, இன்று சொந்த நாட்டு மக்களையும் உளவு பார்க்க வேண்டிய நிர்பந்தமும்; கட்டாயமும் உலக நாடுகள் அனைத்திற்கும் ஏற்பட்டுள்ளது. இது “மல்லாந்துப்படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம்” என்றாலும், இதை விட்டால் வேறு வழியில்லை என்பதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை.
எல்லா மதத்திலும், எல்லா இனத்திலும் நல்லவர்களும், இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதைப் போல எல்லா தொழிலும், எல்லா துறைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை, நாம் வெட்கத்தோடு ஒத்துக்கொள்ளதான் வேண்டும். இதில் மனித உரிமை போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் அனைவருமே அடக்கம். இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல!
அவ்வளவு ஏன்?! கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும்; மருமகளுக்கு தெரியாமல் மாமியாரும், மாமியாருக்கு தெரியாமல் மருமகளும்; காதலனுக்கு தெரியாமல் காதலியும், காதலிக்கு தெரியாமல் காதலனும் உளவு பார்க்கும் வழக்கம் இன்று அதிகரித்து வருகிறது.
இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், கணவன் தூங்கும்போது, அவனது அலைபேசியை மனைவி ஆராய்வதும்; மனைவி தூங்கும்போது, அவளது அலைபேசியை கணவன் ஆராய்வதும்; இன்றைக்கு பல குடும்பங்களில் மனநோயாகவே மாறிப்போயிருக்கிறது. இதில் தனிமனித சுதந்திரம் எங்கு வாழ்கிறது?!
வன்முறையாளர்கள்; தேசத்துரோகிகள்; கொடிய மற்றும் கொடூரமானக் தொடர் குற்றங்களை செய்யும் நபர்களை கண்காணித்து, அவர்களின் சதித்திட்டங்களையும்; நாசவேலைகளையும் முன்கூட்டியே அறிந்து, அதை நடைபெறாமல் முறியடித்து; சட்டம் – ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்து; நாட்டு மக்களை நிம்மதியாக வாழவைப்பதில் உளவாளிகளும், உளவுத்துறையினரும் மற்றும் ‘‘பெகாசஸ் ஸ்பைவேர் (PEGASUS SPYWARE)” போன்ற நவீனத் தொழில்நுட்ப மென்பொருட்களும் பெருபங்கு வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதை நல்ல வேலைகளுக்கும்; நல்ல வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நவீனத் தொழில்நுட்பம் என்பது ‘இருமுனை கத்திப் போன்றது’. இவற்றை மிக கவனமாக கையாள வேண்டும்.
ஆனால், இதில் மிகப் பெரிய துரதிஸ்டம் என்னவென்றால், அரசியல் மற்றும் ஊடகத்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் அறம் சார்ந்த நடவடிக்கைள் குறைந்து, அதர்மம் அதிகரித்து வருவதால் அனைவரையும் உளவு பார்க்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
அண்ட்ராய்டு (Android), ஐபோன் (iphone), மின்அஞ்சல் (E-mail), ஆதார் அட்டை (Aadhaar card), டைரி (Diary) எழுதும் பழக்கம், கண்காணிப்பு கேமரா (CCTV- Closed-Circuit Television) பயன்பாடு, ஆகியவற்றை நேர்மையான, ஒழுக்கமான நபர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், அதனால் மிகப்பெரிய பிரச்சனைகளையும், அவமானங்களையும் நிச்சயம் சந்திக்க வேண்டி வரும். உச்சப்பட்சமாக சிறைக்கும் செல்ல வேண்டி வரும்.
எந்த ஒரு தனி மனித சுதந்திரமும் நேர்மையான, நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வரை, அதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், ஒரு தனி மனிதனின் சுதந்திரம், எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி தேசப்பாதுகாப்புக்கும், வெகுஜன மக்களின் நிம்மதிக்கும் அது அச்சுறுத்தலாக இருக்குமேயானால், அதற்கு காரணமாக இருக்கும் நபர்கள், யாராக இருந்தாலும்; எத்தகைய உயர் அந்தஸ்தில் இருந்தாலும், அத்தகைய நபர்களின் அன்றாட நடவடிக்கைளை கண்காணித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தண்டிப்பதில் எந்த தவறும் இல்லை.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com