5 நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை நேற்று (ஆகஸ்ட் 2, 2021) திறந்துவைத்தார்.
இன்று (ஆகஸ்ட் 3, 2021) நீலகிரி மாவட்டத்திற்கு புறப்பட்ட இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
நீலகிரி செல்லும் வழியில் கோவை மாவட்டம், சூலூர் விமானப் படைதளத்திற்கு வருகை புரிந்த இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை, தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உட்பட்ட தீட்டுக்கல் ஹெலிக்காப்டர் தளத்திற்கு வந்தடைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.
இந்த பயணத்தின் போது தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஊட்டி ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் நாளை (ஆகஸ்ட் 4, 2021) நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
-Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com