டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களுக்கு புதுதில்லியில் இன்று மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீரஜ் சோப்ரா, ரவிகுமார் தாஹியா, மீராபாய் சானு, பி வி சிந்து, பஜ்ரங் புனியா, லோவ்லினா பொர்கோஹைன் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியினருக்கு புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் கிரண் ரிஜிஜு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக், விளையாட்டுத்துறை செயலாளர் ரவி மிட்டல் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு சன்தீப் பிரதான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
டோக்கியோவில் நேற்றிரவு நடைபெற்ற ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட விமான பயணத்திற்கு பின் தாயகம் திரும்பிய தங்கப்பதக்கம் வென்ற நீரஜ், வெள்ளி வென்ற ரவி, வெண்கலம் வென்ற பஜ்ரங், லோவ்லினா மற்றும் மன்பிரீத் ஆகியோருடன் மீராபாய் மற்றும் சிந்து ஆகியோர் இன்றைய பிரமாண்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அனுராக் தாகூர், “டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பல சாதனைகளை முதல்முறையாக இந்தியா படைத்தது. புதிய இந்தியா உலகத்தில் எவ்வாறு முன்னிலை வகிக்க விரும்புகிறது என்பதன் பிரதிபலிப்பாக ஒலிம்பிக்கில் இந்திய அணியின் வெற்றி விளங்குகிறது,” என்றார்.
மேலும் பேசிய அவர், “சுய ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாம் வெற்றியாளர்கள் ஆகலாம் என்பதை ஒலிம்பிக் போட்டிகள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. நமது விளையாட்டு வீரர்கள் கிராமங்கள், நகரங்கள், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாடு முழுவதிலும் இருந்து வருவதால், விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது,” என்றார்.
விளையாட்டு வீரர்களை பாராட்டிய திரு கிரண் ரிஜிஜூ, 2028 ஒலிம்பிக்கில் இந்தியா மிகப்பெரும் சக்தியாக திகழும் என்றார். “இதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கங்களை இந்த ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்,” என்று அவர் கூறினார்.
இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்களது சிறப்பான பங்களிப்பின் மூலம் நாட்டை பெருமைப்படுத்தியதாக நிசித் பிரமானிக் கூறினார். வருங்கால சந்ததியினர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இந்தியாவை பெருமைப்படுத்துவதற்கான ஊக்கத்தை அளிக்கும் நிகழ்ச்சியாக இன்றைய விழா அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
–எம்.பிரபாகரன்