ஜபல்பூர்-தில்லி வழித்தடத்தில் இண்டிகோ விமானங்களின் சேவையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா துவக்கி வைத்தார்.

ஜபல்பூர்-தில்லி வழித்தடத்தில் இண்டிகோ விமானங்களின் சேவையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங் (ஓய்வு) ஆகியோர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் பிரதீப் கரோலாவுடன் இணைந்து காணொலி மூலம் துவக்கி வைத்தனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் மதிப்புறு விருந்தினராக காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் கடந்த 7 வருடங்களில் இந்திய விமான போக்குவரத்து துறை ஜனநாயகமயமாக்கப் பட்டுள்ளது. சாதாரண மக்களின் எட்டா கனவாக இருந்த விமானப் பயணம் தற்போது அனைவருக்கும் சாத்தியமாகி வருகிறது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “மத்தியப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜபல்பூரில் பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இன்று முதல், நாட்டின் தலைநகரத்தில் இருந்தும், வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்தும் கூடுதல் விமான சேவைகள் ஜபல்பூருக்கு கிடைக்கும்,” என்றார்.

“இன்று நாங்கள் புதிய விமான சேவைகளை மட்டும் ஜபல்பூரில் இருந்து துவக்கி வைக்கவில்லை, ஜபல்பூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான ரூ 421 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளோம். 10,000 சதுர அடியிலான முனைய கட்டிடம், புதிய ஏடிசி கோபுரம், பெரிய விமானங்களுக்கு ஏற்ற வகையில் 1950 மீட்டரில் இருந்து 2750 மீட்டராக ஓடுதளம் விரிவாக்கம் ஆகியவை இதில் அடங்கும்,” என்றும் அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply