குப்பைத் தொட்டியாக மாறிவரும் கோயில் குளங்கள்..!

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது குணசீலம் என்ற கிராமம். இங்குதான் திருப்பதிக்கு நிகரான ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி திருத்தலம் அமைந்துள்ளது.

திருப்பதிக்கு செல்ல இயலாத பக்தர்கள்; இங்கே வந்து ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசித்தாலே போதும் அதற்கான பலனையும், புண்ணியத்தையும் அடைவார்கள் என்கிறது குணசீலன் எனும் மகரிஷியின் தல வரலாறு.

இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள், கண் பார்வையில் கோளாறு உள்ளவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் இந்த கோவிலுக்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிப்பட்டு செல்கின்றனர்.

கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜர் சீடர் சுருதிதேவனும், கால் பாதிக்கப்பட்ட பகுவிராஜனும், வாய்பேச முடியாத கூர்ஜர தேசத்து இளவரசன் தேவதாசனும், இங்கு வந்து ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசித்து சென்றதாக தல வரலாறு கூறுகின்றது.

இப்படி ஆன்மீகத்தின் அடையாளமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் திகழும் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி திருத்தலத்திற்கு சொந்தமான கோயில் குளம்; தற்போது குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது.

ஆம், கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ள ”பாப விநாச தீர்த்த குளம்” பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி, செடி கொடிகள் மண்டி, எந்தவித பராமரிப்பும் இன்றி அந்த குளத்தில் உள்ள தண்ணீர் மாசு அடைந்துள்ளது.

இந்த குளம் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானக் கோயில் குளங்கள் அனைத்தும் இதுபோன்றுதான் தூய்மை இன்றி கிடக்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள கோயில் குளங்கள் அனைத்தையும், போர் கால அடிப்படையில் தூர்வாரி; புனரமைத்து; தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க தமிழக முதலமைச்சர் உடனே உத்தரவிட வேண்டும்.

கோயில் குளங்கள் என்பது ஆன்மீகத்தின் அடையாளம் மட்டுமல்ல: இயற்கையின் வரமாகவும் இருந்து வருகிறது. மழைக் காலங்களில் வீணாக போகும் நீரை சேமிக்கும் பாதுகாப்பு பெட்டகமாகவும்; கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் நிலத்தடி நீர் குறையாமலும் இதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஆறு, ஏரி, கால்வாய், குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் முழுமையாக அகற்றி; முறையாக பராமரித்தால், தண்ணீருக்காக நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை; மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை.

அதனால்தான்,

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
!

-என்கிறார் நமது திருவள்ளுவப் பெருந்தகை.

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

அத்தகைய மழை நீரை பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டுமானால்; நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply