இரண்டு நாள் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தில்லி பயணத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் ப்ரஹ்லாத் ஜோஷி, வர்த்தகம், தொழில்துறை, ஜவுளி, நுகர்வோர் மற்றும் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே ஆகியோரை, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார்.
மேலும், காவிரி, கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட நதி நீர் சச்சரவுகள் குறித்து புதுதில்லியில் சட்டம் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பும் நடைபெற்றது.
இதில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த கர்ஜோலா, கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர். கே. சுதாகர், நீர்வளத்துறை துணை தலைமை செயலாளர் ராகேஷ் சிங், கர்நாடக தலைமை செயலாளர் ஜெனரல் மஞ்சுநாத் பிரசாத், வழக்கறிஞர் ஜெனரல் பிரபுலிங்க நவதகி, பாராளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் உதசி ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தற்போது மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் இந்த இக்கட்டானச் சூழ்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாட்டிற்கு பல்வேறு சங்கடங்களை உருவாக்குமோ?! என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
எனவே, தமிழக ஆட்சியாளர்கள் மிகவும் விழிப்பாக இருப்பது நல்லது.
மேகதாது அணை விவகாரம்!- ஒரு கண்ணோட்டம்.
2015 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
2018 ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினார்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேகதாது அணை கட்ட அனுமதியே தரவில்லை, தமிழக அரசின் மனு அர்த்தமற்றது, அதனை தள்ளுபடி செய்யவேண்டும் என 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.
மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது, தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையில் கடந்த மே மாதம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை அனுமதியின்றி கட்டப்படுகிறதா? என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதுடன்; ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர; கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த உத்தரவை ரத்து செய்தது.
இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என, அன்றைய கார்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றைய கார்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் அனுப்பினார்.
அதன்பிறகு பாஜகவின் உட்கட்சி விவகாரத்தால் முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கடந்த ஜூலை 28 ந்தேதி கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். இவர் பதவியேற்ற அடுத்த நிமிடமே; ‘மேகதாது அணையை கட்டியே தீருவோம்’ என பேட்டியளித்தார்.
அதன்படி எப்படியாவது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி; தனது அரசியல் வாழ்வை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான், ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேண்டுகோள்..!
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com