தற்சார்பு இந்தியாவை நோக்கி பணியாற்றும் அறிவியல் திறமைகள் & ஸ்டார்ட்-அப்புகளை அடையாளம் காண மத்திய-மாநில ஒருங்கிணைப்பு தேவை!- டாக்டர் ஜிதேந்திர சிங்.

பிரதமர் நரேந்திர மோதியின் ‘தற்சார்பு இந்தியா’ கனவை அடைய மக்களை சென்றடைந்து, திறமையுள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள், பெண் விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் மற்றும் புது நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) அடையாளம் காண தொடர் மத்திய-மாநில ஒருங்கிணைப்பு தேவை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வலியுறுத்தினார்.

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை கொண்டாடும் வகையில் அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுக்களின் பங்களிப்புடன் வருடம் முழுவதும் நடைபெறவுள்ள ‘விக்யான் உத்சவ்’-வை தொடங்கி வைத்து பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், “பிரதமர் நரேந்திர மோதியின் ‘தற்சார்பு இந்தியா’ லட்சியத்தை அடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமாகும். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுக்களுக்கு இதில் முக்கிய பங்குண்டு,” என்று கூறினார். 

தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தேவையாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளது என்று கூறிய அவர், மத்திய-மாநில அரசுகளின் ஒன்றிணைந்த முயற்சிகளின் மூலம் அறிவியல் உலகில் நாடு முக்கிய பங்காற்ற போவதாக தெரிவித்தார்.

இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுவது வெறும் ஒரு நிகழ்ச்சியோடு முடிந்து விடக்கூடாது என்று சுதந்திர தின உரையில் பிரதமர் கூறியது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், புதிய உறுதிகளோடு முன்னேறி செல்வதற்கான களப்பணியாற்றப்பட வேண்டும் என்றார்.

“இங்கு தொடங்கி அடுத்த 25 ஆண்டுகளில் சுதந்திரத்தின் 100-வது ஆண்டை நாம் கொண்டாடும் ஒட்டுமொத்த பயணத்தை புதிய இந்தியாவை உருவாக்கும் அம்ரித் காலகட்டம் குறிக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை புகுத்துவதன் மூலம் தீர்மானிக்கப்படும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply