மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மிதிவண்டிப் பேரணி!- புனேவின் எரவாடாவிலிருந்து கொடியசைத்துத் துவக்கம்.

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 10 மிதிவண்டிப் பேரணிகளை நடத்தி வருகிறது. அனைத்துப் பேரணிகளும் அக்டோபர் 2-ஆம் தேதி, காந்தி ஜெயந்தியன்று புதுதில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் நிறைவடையும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் இந்திய சுதந்திர போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்த அதிகம் அறியப்படாத வீரர்களின் துணிச்சலான அனுபவங்களுடன் இளைஞர்களை இணைக்கும் நோக்கத்தோடு இந்தப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.

மிகவும் நீளமான பேரணி, புனேவின் எரவாடா சிறைச்சாலையிலிருந்து இன்று கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது.‌ வகுப்புவாத விருதுக்கு எதிராக மகாத்மா காந்தி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டபோது வரலாற்று சிறப்புமிக்க பூனா ஒப்பந்தம் எரவாடா சிறைச்சாலையில் கையெழுத்தானது. கடந்த 1932ம் ஆண்டு மற்றும் 1942-ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இதர போராட்ட வீரர்களுடன் மகாத்மா காந்தி இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

புனே நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பாபத், பிரபல ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை, சுதந்திர போராட்ட வீரர் வசந்த் பிரசாதே, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கூடுதல் தலைமை இயக்குநர் அனில் குமார், கே என் திரிபாதி மற்றும் பலர் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply