நெருப்புக்கு இரையான சிறை கைதிகள்…!-இந்தோனேசியா சிறைச்சாலைகளின் அவலங்கள்…!

இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் அமைந்துள்ள தங்கராங் சிறைச்சாலையில், உள்ளூர் நேரப்படி இன்று (08.09.2021) அதிகாலை 01.45 மணிக்கு தீ பற்றியது.

தொடக்கத்தில் சிறைச்சாலையின் C2 பிரிவில் சிறிய அளவில் பற்றிய தீ; சில நிமிடங்களில் சிறைச்சாலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இந்நிலையில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரிவுகளின் (செல்) உள்ளே இருந்து அலறல் சப்தம் கேட்டது.

சிறைச்சாலையில் உள்ள அனைவரையும் வெளியேற்றுவதற்கு அங்கு பணியில் இருந்த சிறை வார்டன்கள் மற்றும் காவலர்கள் முயன்றனர். ஆனால், அதற்குள் தீ கடுமையாக பற்றி எரிய தொடங்கியது; அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது; சிறை முழுவதும் மனிதர்களின் மரண ஓலம் கேட்டது.

இந்த மரணப் போராட்டத்தில் இருந்து 20 கைதிகளை மட்டும்தான் பத்திரமாக வெளியேற்ற முடிந்தது. மற்றவர்கள் அனைவரும் நெருப்பில் அகப்பட்டுக் கொண்டனர்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் இன்று (08.09.2021) அதிகாலை 02.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். இறுதியாக இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் 41 கைதிகள் இறந்தனர். 8 கைதிகள் தீக்காயங்களால் பலத்த காயமடைந்தனர் மற்றும் 73 பேர் லேசான காயமடைந்தனர்.

இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளான சீதனாலா மருத்துவமனை மற்றும் தங்கராங் ரீஜென்சி பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர்.

இறந்த கைதிகளின் உடல்கள் மேலதிக விசாரணைக்காக போலீஸ் மத்திய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், ஜகார்த்தா காவல் துறைத் தலைவர் எம். ஃபாடில் இம்ரான் இன்று காலை சம்பவ இடத்தைப் பார்வையிட்டதோடு; சிறைச் சாலை சுற்றுப் பகுதிகளை பாதுகாப்பதற்காக சுமார் 150 காவல்துறையினரை பணியில் ஈடுப்படுத்தியுள்ளார்.

நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் யாசோன்னா லாவ்லி மற்றும் துணை அமைச்சர் எட்வர்ட் உமர் ஷெரீப் ஹியாரிஜ் ஆகியோர் உள்ளூர் நேரப்படி இன்று காலை காலை 10 மணிக்கு சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

இறந்த 41 கைதிகள் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவும், அதைத் தொடர்ந்து பயங்கரவாதம் மற்றும் கொலை வழக்குக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். அவர்களில் இருவர் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்கா மற்றும் மற்றொருவர் போர்ச்சுகலைச் சேர்ந்தவர். காயமடைந்த கைதிகள் அனைவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் என்பது இங்கு குறிப்பித்தக்கது.

இதோ இந்தோனேசியா சிறைச்சாலையின் அவலங்கள்…!

Salemba prison in Jakarta, July 12, 2020 (File Photos)

மேலே உள்ள இரண்டு படங்களும் ஏதோ சாலை ஓர நடைபாதையில் வசிக்கும் மக்கள் என்று நினைத்து விடாதீர்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது; அதாவது ஜூலை 2020 காலக்கட்டத்தில், இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் உள்ள “சலெம்பா” சிறைச்சாலையில் இருந்த கைதிகளின் நிலை இதுதான்.

இப்படங்களை இந்தோனேசிய அரசியல் கைதி சூர்யா அன்டா என்பவர், கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் உள்ள சலெம்பா சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த அவலத்தை; வெளியில் வந்தவுடன் வெளியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

இந்தோனேசியாவின் கடந்த கால சிறை நிலைமைகள் குறித்து முழுமையாக தெரிந்துக் கொள்ள ”PRISON CONDITIONS IN INDONESIA” என்ற கீழ்காணும் அறிக்கையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

indonesi908

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN September 9, 2021 10:27 pm

Leave a Reply