உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷில் இன்று நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் (ஈஎஸ்ஐசி) 185-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள ஹரோஹொல்லி மற்றும் நர்சாப்பூரில் 100 படுக்கைகளை கொண்ட புதிய ஈஎஸ்ஐசி மருத்துவமனைகளை நிறுவ தேவையான ஐந்து ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான ஒப்புதல் குறித்து அமைச்சர் அறிவித்தார்.
கேரளாவில் ஏழு புதிய ஈஎஸ்ஐசி சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட இதர அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அரசு சேவைகள் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்வதை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு பாடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
‘அடல் பீமித் வியாக்தி கல்யாண் யோஜனா’ 2022 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ் காப்பீடு பெற்றுள்ள நபர்கள் பணியிழக்கும் பட்சத்தில் 3 மாதங்களுக்கு அவர்களது ஊதியத்தின் 50 சதவீதம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
எங்கெல்லாம் ஈஎஸ்ஐசி மருத்துவமனைகள் இல்லையோ, அங்கிருக்கும் நபர்கள் அருகிலுள்ள பதிவுபெற்ற மருத்துவ சேவை வழங்குனர்களிடம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
–எம்.பிரபாகரன்