நிலையான எரிசக்தி நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பெரு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளை குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி, தங்களது இடங்களில் நிலைத்தன்மையை நோக்கி நிறுவனங்களும் அரசுத் துறை அமைப்புகளும் கடுமையாகப்பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் மற்றும் கிடங்குகள் போன்ற பெரிய அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டங்களை பெருமளவு பயன்படுத்துமாறு அவர் யோசனை தெரிவித்தார்.

இதற்காக, புதிய கட்டிடங்களுக்கு மாதிரி கட்டிட விதிகளைப் பின்பற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை திரு வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார். போதுமான ஒளி மற்றும் காற்றோட்டத்தை உறுதி செய்வதுடன் பெரிய கட்டிடங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் கூரைகளின் மீது நிறுவப்படும் சூரியசக்தித் திட்டங்கள், சூரிய சக்தி தண்ணீர் வெப்பமூட்டும் கருவிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு முதலியவற்றை கட்டாயமாக்குவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

புதுச்சேரியின் ஜிப்மரில் 1.5 மெகா வாட் திறன் கொண்ட கூரை மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டத்தை குடியரசு துணைத்தலைவர் நாட்டிற்கு அர்ப்பணித்துப் பேசுகையில், ‘எரிசக்தி மாற்றத்திற்கான’ சர்வதேச தலைமையாக உருவாவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். இந்தியாவில் அண்மையில் 100 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் நிறுவப்பட்டதை அவர் பாராட்டினார்.

இந்தியாவின் ‘எரிசக்தி மாற்றம்’ என்ற உத்வேகத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் கூரைகள் மீது நிறுவப்படும் சூரியசக்தித திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நாயுடு, இவ்வாறு பொருத்தப்படும் திட்டங்கள், கட்டிடங்களின் மீது காலியாக உள்ள இடங்களை உபயோகித்து, பயன்பாட்டிற்கு ஏற்ற எரிசக்தியை உற்பத்தி செய்து , பரிவர்த்தனை இழப்புகளைக் குறைக்கும் என்று தெரிவித்தார். சூரிய சக்தித் திட்டத்தை பிரபலப்படுத்தவும், கூரைகள் மீது நிறுவப்படும் சூரியசக்தித் திட்டத்தின் பயன்கள் குறித்தும் பெருவாரியான மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒன்றிணைந்து குழு இந்தியாவாக பணியாற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் அழைப்புவிடுத்தார். கூரைகள் மீது நிறுவப்படும் சூரியசக்தி அமைப்புமுறைகளுக்கு அளிக்கப்படும் மானியங்கள் மற்றும் இதன் மூலம் ஏற்படும் மின்சார சேமிப்பு குறித்து பெருமளவில் பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பெருந்தொற்று கற்றுத் தந்துள்ள பாடங்களைக் குறிப்பிட்ட திரு நாயுடு, கட்டிடங்களில் காற்றோட்ட வசதி மற்றும் காற்று சுழற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.‌ “சூரிய ஒளி சக்தி தான் நமது இயற்கையான கிருமிநாசினி. நமது முன்னோர்கள் இதனை நன்கு புரிந்து வைத்திருந்தனர். அவர்களது திட்டமிடல் மற்றும் வீடுகளின் கட்டமைப்பில் இது பிரதிபலித்தது”, என்று அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியமான வாழ்விற்காக காற்றோட்டம் மற்றும் இயற்கையான வெளிச்சத்தை வீடுகள் மற்றும் பணியிடங்களில் உருவாக்குவதன் தேவையை அவர் சுட்டிக்காட்டினார்.

பெருந்தொற்றின் காலகட்டத்தில் மிகச்சிறப்பான உறுதித்தன்மையை வெளிப்படுத்தி, துணை நின்ற ஜிப்மர் போன்ற மருத்துவ நிறுவனங்களை திரு நாயுடு பாராட்டினார். இது போன்ற நிறுவனங்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒன்றிணைந்த முயற்சிகளால் பெருந்தொற்றை எதிர்த்து நாடு சிறப்பாகப் போராடி வருவதாக அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் என். ரங்கசாமி, புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகர் ஏம்பலம் ஆர். செல்வம், மக்களவை உறுப்பினர் வி. வைத்திலிங்கம், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வி. ஆறுமுகம், ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய முழு உரை பின்வருமாறு:

“சகோதர, சகோதரிகளே,

உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில், புதுச்சேரி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

புதுச்சேரி ஒரு அரிய ஈர்ப்பைக் கொண்ட அழகான நகரம். இந்திய பாரம்பரியம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் கட்டிடக்கலை ஆகிய தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த கலாச்சாரம், எப்போதும் நேரில் சென்று காணும் விருந்தாக அமைகிறது. கல்வி, சுற்றுலா மற்றும் ஆன்மீகத்தில் வளர்ந்து வரும் முனையமான புதுச்சேரி, கண்கவர் கடற்கரைகள், வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் உலகப் பிரசித்தி பெற்ற அரவிந்தர் ஆசிரமம் ஆகியவற்றுடன் உலகின் மிகவும் அழகான நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இவை எல்லாவற்றையும் விட, புதுச்சேரி மக்களின் விருந்தோம்பல் குணம், இந்த யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பான இயல்பை வழங்குகிறது.

நண்பர்களே,

புதுச்சேரியின் ஜிப்மரில் 1.5 மெகா வாட் திறன் கொண்ட கூரை மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த ஜிப்மர் குடும்பத்தினருக்கும், இந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஜிப்மரில் உள்ள சூரிய சக்தித் திட்டம், நம் அனைவருக்கும் வாய்க்கப்பெற்ற சூரிய ஒளி என்ற வளத்தை பயன்படுத்தும். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளை அடிப்படையாகக்கொண்ட கூரைகள் மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டங்களுள் இதுவும் ஒன்று என்பதை நான் அறிகிறேன். இந்தப் பசுமை வளாகத்தில் அமைந்துள்ள 15 கட்டிடங்களின் மேற்கூரையில் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்துவதன் மூலம் 1.5 மெகாவாட் மின்சாரத்தை இந்தத் திட்டம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் மருத்துவமனையின் 15% எரிசக்தித் தேவை பூர்த்தி செய்யப்படும்.

நண்பர்களே,

2030-ஆம் ஆண்டிற்குள் பாரிஸ் பருவநிலை மாநாட்டிற்கான தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகளின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான நமது முயற்சிக்கு ஏற்ப இந்தத் திட்டம் உள்ளது.

அண்மையில் 100 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் பொருத்தப்பட்டிருப்பதன் வாயிலாக, எரிசக்தி மாற்றத்தில் சர்வதேச தலைமையாக உருவாவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறுகிறது

‘எரிசக்தி மாற்றத்தின்’ இந்த உத்வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு, கூரைகள் மீது நிறுவப்படும் சூரியசக்தித் திட்டங்கள், சிறிய வகையிலான, ஆனால் நிலையான பங்களிப்பாகும். நிலத்தின் மீது பொருத்தப்படும் சூரியசக்தித் திட்டங்களில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளிட்டவை எழும்.

மற்றொருபுறம், கூரைகள் மீது பொருத்தப்படும் சூரிய சக்தித் திட்டங்கள், கட்டிடங்களின் மீது காலியாக உள்ள இடங்களை உபயோகித்து, பயன்பாட்டிற்கு ஏற்ற எரிசக்தியை உற்பத்தி செய்து, பரிவர்த்தனை இழப்புகளைக் குறைக்கும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் மற்றும் கிடங்குகள் போன்ற பெரிய அமைப்புகள் மற்றும் தொழில்துறைகளின் கூரைகள் மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டங்களை பெருமளவு பயன்படுத்தச் செய்ய வேண்டும்.

இந்தத் துறையில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒன்றிணைந்து குழு இந்தியாவாக பணியாற்ற வேண்டும். சூரிய சக்தித் திட்டத்தை பிரபலப்படுத்தி, கூரைகள் மீது நிறுவப்படும் சூரியசக்தித் திட்டத்தின் பயன்கள் குறித்து பெருவாரியான மக்களிடையே விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்த வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வீட்டு கூரைகளில் சூரிய சக்தி முறைகளை அமைப்பதற்கு ஏதுவாக கூரைகள் மீது நிறுவப்படும் சூரியசக்தி அமைப்புமுறைகளுக்கு அளிக்கப்படும் மானியங்கள் குறித்து பெருமளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் மின்சார செலவும் இதன் மூலம் பெரிதும் சேமிக்கப்படும்.

சகோதர, சகோதரிகளே,

இந்தத் திட்டத்தின் நலனைக் கருதி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட இதர பெரிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பகுதிகளில் நிலைத்தன்மையை நோக்கி கடுமையாகப்பாடுபடும்படி நான் அழைப்பு விடுக்கிறேன். இதன் மூலம் செலவு குறைந்து குறுகிய நிலையில் நிறுவனம் பயன்பெறுவது மட்டுமல்லாமல், நிலையான வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேறும் வேளையில், ஒட்டுமொத்த நாட்டிற்கும் இதன்மூலம் பயன் கிடைக்கும்.

புதிய கட்டிடங்களுக்கு மாதிரி கட்டிட விதிகளைப் பின்பற்றுவது குறித்து அனைத்து மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் ஆலோசிப்பதற்கான காலம் நெருங்கி விட்டதாக நான் கருதுகிறேன். குறிப்பிட்ட அளவு மற்றும் / அல்லது எரிசக்தி பயன்பாடு அதிகரிக்கும் ஒரு சில பிரிவுகளின் கீழ் செயல்படும் கட்டிடங்களுக்கு கூரைகள் மீது பொருத்தப்படும் சூரிய சக்தித் திட்டங்கள், சூரிய சக்தியில் தண்ணீரை சூடாக்கும் கருவிகள் மற்றும் மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள் ஆகியவை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பு எப்போதும் இல்லாத வகையிலான பெருந்தொற்றுடன் நாம் போராடி வருகிறோம். சமூகத்தின் மீது அதன் பெருவாரியான தாக்கத்திற்கு மத்தியிலும் நமது சுகாதார அமைப்புமுறைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு பல்வேறு பாடங்களை கொவிட் கற்றுத் தந்துள்ளது.

நமது கட்டிடங்களில் காற்றோட்டம் சம்பந்தமான அம்சத்தை கொவிட் முன்வைத்துள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இயற்கையின் அன்பளிப்புகளான காற்று சுழற்சி மற்றும் போதிய சூரிய ஒளி ஆகியவை நமது ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சூரிய ஒளி, ஓர் இயற்கையான கிருமிநாசினி. நமது முன்னோர்கள் இதனை நன்கு புரிந்து வைத்திருந்தனர். அவர்களது திட்டமிடல் மற்றும் வீடுகளின் கட்டமைப்பில் இது பிரதிபலித்தது. இந்த நடைமுறைகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டு ஆரோக்கியமான வாழ்விற்காக காற்றோட்டம் மற்றும் இயற்கையான வெளிச்சத்தை வீடுகள் மற்றும் பணியிடங்களில் உருவாக்க வேண்டும். பெருந்தொற்றிடமிருந்து இந்த முக்கிய பாடத்தை நாம் கற்றுக்கொள்வோம்.

நமது நிறுவனங்களின் மிகச்சிறந்த உறுதித்தன்மையை பெருந்தொற்று வெளிக்கொணர்ந்து இருப்பதுடன் கடினமான தருணத்தில் அவை தங்களது திறமையையும் நிரூபித்துள்ளன. குறிப்பாக ஜிப்மர் போன்ற மருத்துவ நிறுவனங்கள் பெருந்தொற்று போன்ற தருணத்தில் துணைநின்று சவாலை எதிர் கொண்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் புதுச்சேரி மட்டுமல்லாது அருகிலுள்ள தமிழக மாவட்டங்களிலும் கொவிட் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்குவதில் முக்கிய மையமாக ஜிப்மர் விளங்கியதாக நான் அறிகிறேன்.

ஜிப்மர் குடும்பத்தினர், ஆதரவளித்த பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பிற்காக இந்த தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1.5 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீது பொருத்தப்படும் சூரிய சக்தித் திட்டத்தை வெற்றிகரமாக நிறுவியதற்காகவும், மக்களின் சுகாதார சேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஜிப்மர் குடும்பத்தினர் மேற்கொண்டுவரும் நிலையான நடவடிக்கைகளுக்காகவும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

நன்றி.

ஜெய் ஹிந்த்!”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply