ஜவுளித் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேர்மறை மாற்றம் ஏற்படும்: மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விஜாய் குமார் சிங் சென்னையில் பேட்டி.

ஜவுளித் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதன் வாயிலாக தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நேர்மறையான மாற்றம் ஏற்படும் என்று மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விஜாய் குமார் சிங் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

ரூ.10,683 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின்கீழ், செயற்கை நூலிழை ஆயத்த ஆடைகள் (MMF Apparel), செயற்கை நூலிழை துணிகள் (MMF Fabrics) மற்றும் தொழில்நுட்ப ஜவுளியில் 10 பிரிவுகள்/பொருட்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறிய அவர், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துடன் மத்திய, மாநில அரசு வரிகளிலிருந்து சலுகை அளிக்கும் திட்டம் (RoSCTL), ஏற்றுமதி பொருட்கள் மீதான வரிகள் மற்றும் தீர்வைகளிலிருந்து சலுகை அளிக்கும் திட்டம் (RoDTEP) மற்றும் குறைந்த விலையில் இடுபொருட்களை வழங்குவது, திறன் மேம்பாடு போன்ற அரசின் நடவடிக்கைகளால், ஜவுளி உற்பத்தியில் புதிய காலத்தை நோக்கி பயணிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

ஜவுளித் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் மூலம், நாட்டில் உயர் மதிப்புகொண்ட செயற்கை நூலிழை துணிகள், ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். இந்தப் பிரிவுகளில் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்காக, முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத்தொகை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உயர்மதிப்பு கொண்ட செயற்கை நூலிழை பிரிவுக்கு மிகப்பெரும் ஊக்கம் அளிக்கும். மேலும், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தை ஏற்படுத்துவதற்காக பருத்தி மற்றும் பிற இயற்கை நூலிழை அடிப்படையிலான ஜவுளித் துறை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கும். இந்த நடவடிக்கைகளால், உலகளாவிய ஜவுளி வர்த்தகத்தில் இந்தியா தனது வரலாற்றுப்பூர்வமான ஆதிக்க அந்தஸ்தை மீட்டெடுக்க முடியும்.

ஜவுளித் துறையில் புதிய பரிணாமமாக தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவு திகழ்கிறது. இது கட்டமைப்பு, நீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், பாதுகாப்பு, ராணுவம், ஆட்டோமொபைல், விமானம் போன்ற பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில் பின்பற்றப்படுகிறது. இது பொருளாதாரத்தில் இந்தத் துறைகளின் திறனை மேம்படுத்தும்.

5 ஆண்டு காலத்தில், ஜவுளித்துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டமானது, ரூ.19,000 கோடிக்கும் மேலான புதிய முதலீடுகளைப் பெற்றுத் தரும் மற்றும் ரூ.3 லட்சம் கோடிக்கும் மேலான அளவுக்கு புதிதாக உற்பத்தி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துறையில் கூடுதலாக 7.5 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும், பல லட்சம் பேருக்கு இதனை சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தும். ஜவுளித் துறையில் அதிக அளவில் பெண்கள் பணியாற்றுவதால், இந்தத் திட்டமானது பெண்களை மேம்படுத்துவதுடன், அமைப்புசார்ந்த பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply