மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், செப்டம்பர் 24-ஆம் தேதி முதலாவது இமாலய திரைப்படத் திருவிழாவைத் தொடங்கி வைப்பார். செப்டம்பர் 24 முதல் 28 வரை லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரில் இந்த ஐந்து நாள் திருவிழா நடைபெறும்.
ஷெர்ஷா திரைப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அதன் முக்கிய நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த விழாவின் முதல் திரைப்படமாக ஷெர்ஷா இடம்பெறும்.
பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களைக் கவர்வதற்காக பல்வேறு பிரிவுகளை இந்தத் திரைப்படத் திருவிழா கொண்டிருக்கும். தேசிய விருதுகள் மற்றும் இந்திய திரைப்படத் திருவிழாக்களில் திரையிடப்படும் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் இதில் விழாவில் காட்சிப்படுத்தப்படும்.
பார்வையாளர்களின் நாவிற்கு சுவை ஊட்டுவதற்காக, லடாக் யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசித்திபெற்ற வெவ்வேறு உணவு வகைகளும் திருவிழாவில் இடம்பெறும். இது தவிர லடாக்கின் புகழ்பெற்ற கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் கலாச்சாரத் துறையுடன் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இசைத் திருவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடுவர் குழுவின் தலைவராக அசாமைச் சேர்ந்த திருமதி மஞ்சு போரா, உறுப்பினர்களாக தமிழகத்தின் திரு ஜி.பி. விஜயகுமார் மற்றும் ஜம்மு காஷ்மீரின் ராஜா ஷபீர் கான் ஆகியோர் செயல்படுவார்கள்.
–எம்.பிரபாகரன்