சில்லரை விற்பனையில் அதிக போட்டி ஏற்படவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சரக்கு போக்குவரத்து செலவை 10 சதவீத்துக்கு கீழ் குறைக்க வேண்டும் என நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
எம் அண்ட் எம் மற்றும் அகமதாபாத் ஐஐம் ஆகியவற்றின் எம்பவர் தொடர் கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது:
அடுத்த 2 ஆண்டுகளுக்குள், 25,000 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் கி.மீ தூரத்துக்கும் அதிகமாக சாலைகள் அமைக்க, 2,800 திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், முக்கிய நகரங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இணைக்க 34,800 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் திட்டமிடப்பட்டுள்ளது.
பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கவும், பிளக்ஸ் இன்ஜின்களையும் பயன்படுத்துவதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இந்த பிளக்ஸ் இன்ஜிக்கள் 100 சதவீத எத்தனால் அல்லது 100 சதவீத பெட்ரோலில் இயங்கும். முன்பு மின்சார வாகனங்களுக்கு மாற மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால் தற்போது, 2 சக்கர மின் வாகனங்களின் விற்பனை சாதனை படைத்து வருகிறது. 4 சக்கர வாகனங்களுக்கும், இதே முறை பின்பற்றப்படும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.
–திவாஹர்