ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜா நகரில் உள்ள கண்காட்சி அரங்கில் 40வது சர்வதேச புத்தக கண்காட்சி நவம்பர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் மத்திய அரசின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான வெளியீடுகள் பிரிவு தனது வெளியீடுகளைக் காட்சிக்கு வைத்துள்ளது.
ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில், வெளியீடுகள் பிரிவு அரங்கத்தின் துவக்க நிகழ்ச்சியில், துபாயில் உள்ள இந்திய துணை தூதர் டாக்டர் அமல் பூரி பாராட்டு குறிப்பை எழுதினார். ‘‘பல பிரிவுகளில் உயர்தரமான புத்தகங்களை வெளியிடுவதில் வெளியீடுகள் பிரிவு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது’’ என அவர் குறிப்பிட்டார்.
‘ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி 2021’-ல், 1566 வெளியீடு நிறுவனங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிக்கு வைத்துள்ளன. 87 வெளியீடு நிறுவனங்களுடன், இந்த புத்தக கண்காட்சியில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இந்த புத்தக கண்காட்சியில் அமித்தவ் கோஷ், சேத்தன் பகத் மற்றும் அமெரிக்காவின் குழந்தை மேதை கீதாஞ்சலி ராவ் உட்பட பல பிரபல எழுத்தாளர்களின் புத்தங்கள் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, வெளியீடுகள் பிரிவு, இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாறு பற்றிய 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்த கண்காட்சியில் வாசகர்களுக்கு வழங்குகிறது. கலை மற்றும் கலாச்சாரம், இந்திய வரலாறு, பிரபல தலைவர்கள், மொழி மற்றும் இலக்கியம், காந்திய இலக்கியம், மதம் மற்றும் தத்துவம், குழந்தைகளுக்கான இலக்கியம், ராஷ்டிரபதி பவன் பற்றிய புத்தகங்கள், பிரதமரின் உரைகள் போன்றவற்றில் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியீடுகள் பிரிவு பிரத்யேகமாக வெளியிட்ட புத்தகங்களையும் வாசகர்கள் பார்வையிடுவர்.
உலகின் மிக பிரபல புத்தக கண்காட்சியில் ஒன்றான, 40வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் வெளியீடுகள் பிரிவு பங்கேற்கிறது. இந்த 11 நாள் சர்வதேச புத்தக கண்காட்சியை ஷார்ஜா புத்தக ஆணையம் நடத்துகிறது. இதில் 2021ம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற தான்சானியா நாவல் ஆசிரியர் அப்துல்ரசாக் குர்னஹ் மற்றும் நெட்பிலிக்ஸ் ‘மணி ஹீஸ்ட்’ தொடரில் வரும் திரைக்கதை எழுத்தாளர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இலக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ‘சரியான புத்தகம் எப்போதும் உண்டு’ என்பதுதான் இந்தாண்டு புத்தக கண்காட்சியின் கருப்பொருள்,
இதில் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கும் இலக்கிய விவாதங்கள், பயிலரங்குகள், மாநாடுகள், கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள், கச்சேரிகள், நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உணவு பிரியர்களுக்கும், இந்த புத்தக கண்காட்சியில் பலவித உணவுகளை ருசி பார்க்கலாம். பிரபல சமையற் கலைஞர் குணால் கபூர் உட்பட பலரை இந்த சர்வதேச புத்தக கண்காட்சியின் உணவு விடுதிகளில் வாசகர்கள் சந்திக்கலாம்
ஷார்ஜா கண்காட்சி மையத்தின் 7ம் எண் அரங்கத்தில், கூடம் எண் இசட் ஏ 5-ல், மத்திய அரசின் வெளியீடுகள் பிரிவு, தனது வெளியீடுகளை காட்சிக்கு வைத்துள்ளது.
வாசகர்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ள வெளியீடுகள் பிரிவு, நியாயமான விலையில் தனது வெளியீடுகளை விற்பனை செய்கிறது. இதில் வெளியீட்டு பிரிவின் முன்னணி வெளியீடுகளான பிரபல மாத இதழ்கள் யோஜனா, குருஷேத்ரா மற்றும் ஆஜ்கல் மற்றும் வாராந்திர ‘எம்பிளாய்மென்ட் நியூஸ்’ மற்றும் ‘ரோஜர் சமாச்சார்’, ஆண்டு வெளியீடான ‘இந்தியா இயர் புக்’ ஆகியவற்றையும் இந்த கண்காட்சியில் வாங்கலாம்.
–எம்.பிரபாகரன்