புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் (வயது 32), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பகுதி நேர தொழிலாக, லைசென்ஸ் ஏதும் இல்லாமல் புதுச்சேரியில் இருந்து நாட்டு வெடிகளை மொத்தமாக வாங்கி அதை தமிழக பகுதியில் விற்று வந்துள்ளார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் இருந்து நாட்டு வெடிகளை மொத்தமாக வாங்கி வந்து; அதை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூனிமேடு பகுதியில் கலைநேசன் விற்றுள்ளார். விற்றதுபோக மீதியிருந்த நாட்டு வெடிகளை சாக்கு மூட்டையில் கட்டி யமஹா மோட்டார் பைக்கில் எடுத்துக் கொண்டு; அதே பைக்கில் தனது 7 வயது மகனையும் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி அதிவேகமாக புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (04.11.2021) மதியம் 2 மணியளவில் யமஹா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது; சாக்கு மூட்டைகளில் இருந்த நாட்டு வெடிகள் திடீரென தீ பற்றி மொத்தமாக வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் சிதறி பலியானார்கள். அருகில் இருந்த 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் காவல்நிலைய போலிசார் வழக்கு பதிவு (Crime No: 364/2021) செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com