புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியல் 2021- ஐ சுபாஷ் சர்கார் நாளை வெளியிடுகிறார்.

புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியல் 2021- ஐ மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் 29 டிசம்பர் அன்று வெளியிடுகிறார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே காணப்படும் கண்டுபிடிப்பு திறன், ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் முனைவோரை உருவாக்கும் திறன் போன்ற குறியீடுகளின் அடிப்படையில்,இந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்காக,புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை, மத்திய கல்வித்துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் பிரத்யேக கூட்டு முயற்சியாகும். காப்புரிமை பதிவு மற்றும் அனுமதி, பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களின் நிதி திரட்டும் திறன், புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான சிறப்புக் கட்டமைப்பு வசதி போன்ற அம்சங்கள், இந்த தரவரிசை நிர்ணயத்தின்போது முழுமையாக மதிப்பிடப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் தலைவர் பேராசிரியர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

உலக புதுமை கண்டுபிடிப்புக் குறியீட்டில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகக் கூறிய அவர், இந்தப் பட்டியலில் 2015-ம் ஆண்டு 81-வது இடத்தில் இருந்த இந்தியா, 2021-ம் ஆண்டு46-வது இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதில், உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ள போதிலும், இந்த நிலையை மேலும் முன்னேற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கான வலிமையான சூழலை உருவாக்கினால், வரும் ஆண்டுகளில், நமது தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் ஊற்றுக்கண்ணாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சகஸ்ரபுத்தே கூறியுள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply