ஜவுளிகள் அமைச்சகம், அதன் தன்னாட்சி அமைப்புகள், அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாட்டை மத்திய தொழில், வர்த்தகம் மற்றும் ஜவுளிகள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், இ – வர்த்தக தளங்கள் மூலம் நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களை இணைப்பதும், தொழில்நுட்பத்தை அதிகரிப்பதும் அவசியம் என்றார். கைத்தறிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையினரின் வாழ்வாதார வளர்ச்சிக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் ரயில்வே மற்றும் ஜவுளிகள் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் மற்றும் ஜவுளி அமைச்சகத்தின மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நடைமுறையை எளிமைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட திரு கோயல், வெளிப்படைத்தன்மைக்கு வசதியாக தரவுப்பலகை அடிப்படையில். கண்காணிப்பு நடைமுறையை இணையத்தில் செயல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் திட்டங்களின் பயன்கள் மற்றும் தாக்கம் குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் நல்ல தொடர்பு பராமரிக்குமாறும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
ஜவுளிகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்ட செயல்பாடு குறித்தும் அவர் ஆய்வு செய்தார். பிரதமரின் மித்ரா திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதிப்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட திரு கோயல், இதன் பிறகு மாநில அரசுகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெறமுடியும் என்றார். ஜவுளி ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான வழிகளை விரைந்து கண்டறியுமாறு வலியுறுத்திய அமைச்சர், இது அந்நியச் செலாவணியைக் கொண்டுவருவது மட்டுமின்றி, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.
–எம்.பிரபாகரன்