குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகிய இரு முக்கிய பிரமுகர்கள் இரண்டு வாரங்களுக்குள் பார்வையிட்ட நிலையில், அடுத்தகட்ட கடல் சோதனை ஓட்டங்களுக்கு ஐஏசி விக்ராந்த் தயாராக உள்ளது.
கப்பலை பார்வையிட்ட இரு தலைவர்களும் அது கட்டமைக்கப்பட்டுள்ள விதம் குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முதல் கட்ட சோதனை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலும் இரண்டாம் கட்ட சோதனை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சோதனையின்போது பல்வேறு இலக்குகள் வெற்றிகரமாக எட்டப்பட்டன. மூன்றாம் கட்டத்தின் போது கப்பலின் பல்வேறு சென்சார்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்படும்.
ஐஏசி விக்ராந்த் கப்பலானது பல்வேறு விதங்களில் வெற்றியின் அடையாளமாக திகழ்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 76 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை ஆகும். இந்திய கடற்படை மற்றும் கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் ஆகியவை இணைந்து கப்பலை வடிவமைத்துள்ளன. கொரோனா சவால்களுக்கு இடையிலும் கப்பல் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று பல்வேறு அதிநவீன வசதிகளுடன் ஐஏசி விக்ராந்த் உருவாக்கப்பட்டுள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா