கொரோனா பரவல் அதிகரிப்பு!-5 மாநில பொதுத் தேர்தல்களை நடத்த தேதி அறிவிப்பு!-விளக்கைப் பிடித்துக் கொண்டு பாழுங்கிணற்றில் இறங்கும் இந்திய தேர்தல் ஆணையம்.

1768248198_PressNote3

கொரோனா வைரஸ்; ஓமைக்ரான் உள்பட பல்வேறு வடிவத்தில் உருமாற்றம் அடைந்து தற்போது உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இவற்றின் தாக்கம் நம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும், நோய் பரவல் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக; அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு பகுதி நேர; மற்றும் முழு நேர ஊரடங்கு உத்தரவுகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள தோடு; அனைத்து தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆனாலும், பேரிடர் நோய் தொற்றிலிருந்து இப்போதைக்கு உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில்; இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு வேறுவழியில்லாமல் அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு பொருளாதார ரீதியில் நெருப்பாற்றில் நீந்தி வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தவிர மற்ற அனைத்து தரப்பினரும் இந்தக் கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் பொது தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அறிவிப்பு ‘தலை அரிக்கிறது என்பதற்காக கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொண்ட கதையாகத்தான் இருக்கிறது’. ஆம், கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை, இந்திய தேர்தல் ஆணையம் முற்றிலும் மறந்து விட்டது என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரகண்டில் 70 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் ஆக மொத்தம் 690 தொகுதிகளில் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேற்காணும் 5 மாநிலங்களிலும் 18.34 கோடி வாக்காளர்கள் உயிரை பணையம் வைத்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதை நினைக்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறதுஇதனால் அதிக எண்ணிக்கையில் ‘கொரோனா’ நோய் தொற்றுப் பரவும் ஆபத்துள்ளது.

நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்கும்; நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

அது சரி “சர்க்கரை” என்று காகிதத்தில் எழுதி நக்கினால் இனிக்குமா என்ன?! -அதுபோலதான் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவும்.

ஆம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறைகளையும், உத்தரவுகளையும், ஆளும் கட்சி, எதிர்கட்சி, இதரக் கட்சிகள் உள்பட, எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை பின்பற்றவும் இல்லை; இனி பின்பற்ற போவதாகவும் தெரியவில்லை. அவ்வளவு ஏன்? புழு- பூச்சிக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட, இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் கொடுப்பதில்லை என்பதை கடந்த காலங்களில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் உருமாறி காட்டுத் தீ போல பரவி வரும் ‘கொரோனா மறு பரவலை, இந்திய தேர்தல் ஆணையம் எப்படி தடுக்க முடியும்?! (அல்லது) எப்படி தடுக்கப் போகிறது?!

மேலும், வேலை நிமித்தமாக வெளி ஊர்களிலும், வெளி மாநிலங்களிலும் வசித்துவரும் வாக்காளர்கள், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு வரும்போது அவர்கள் மூலம் நோய் தொற்று பரவுமா? பரவாதா?

வாக்கு சாவடியில் சென்று வாக்களிக்க வரிசையில் நிற்கும்போது யாருக்கு நோய் தொற்று இருக்கிறது! (அல்லதுஇல்லை என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள்; நாள்பட்ட நோயாளிகள் பயமின்றி வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

கடந்த 2020 ஆண்டு இதே நாட்களில் இந்தியாவில் “கொரோனா” தொற்றுப் பரவத் தொடங்கியபோது, இப்படிதான் நாம் அலட்சியமாக இருந்தோமா?! அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்; அப்பாவி பொது மக்களுக்கு ஒரு சட்டமா?!

தேர்தல் நடத்துவது எவ்வளவு முக்கியமோ; அதைவிட பன்மடங்கு மிக முக்கியமானது பொது மக்களின் உயிர் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புயல், மழை, வெள்ளப் பெருக்கு, பூகம்பம், நிலச்சரிவு மற்றும் தொற்று நோய் பரவல்… இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தபோது, பொதுத் தேர்தல்களையும், பல இடைத் தேர்தல்களையும் தற்காலிகமாக மறுத்தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த முன் உதாரணங்கள், நம் நாட்டில் ஏற்கனவே பல முறை நடைப்பெற்று இருக்கிறது.

அவ்வளவு ஏன்? கேவலம், அளவுக்கு அதிகமான பணம், பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது என்ற காரணத்திற்காக, பல தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான முழு அதிகாரமும் இந்திய தேர்தல் ஆணையர்களுக்கு இருக்கிறது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையம் ‘கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் நலன் கருதி கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை சுமார் 3 மாதக் காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், கடந்த ஆண்டைப் போல நீதி துறையின் கடும் விமர்சனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உள்ளாக நேரிடும்.

இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது?! என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

அதேபோல் தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் முடிவையும், சுமார் மூன்று மாத காலங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்.

இதற்கு மீறியும் மேற்காணும் தேர்தல்களை அவசர, அவசரமாக நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் முயற்சித்தால், அது பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மற்றும் சுகாதார துறையினருக்கும் பெரும் சவாலாகதான் அமையும்.

எனவே, விளக்கைப் பிடித்துக் கொண்டு பாழுங்கிணற்றில் இறங்கிய நிலையாக தான் அது முடியும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply