பலவகை போக்குவரத்தை மேம்படுத்துவதையும் நாடுமுழுவதும் கடைசி மைல் தொடர்பையும் நோக்கமாகக் கொண்டு “பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தில்” சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
தொழில்துறை தொகுப்பு மற்றும் பொருளாதார முனையங்களுக்கான கட்டமைப்பு தொடர்பு திட்டங்களின் அமலாக்கத்தில் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த அமலாக்கத்திற்காக ரயில்வேக்கள், சாலைகள் உள்ளிட்ட 16 அமைச்சகங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்கும் டிஜிட்டல் தளமாக “விரைவு சக்தி” உள்ளது.
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அமைச்சகம் 22 பசுமை எக்ஸ்பிரஸ் பாதைகள், 23 முக்கிய கட்டமைப்புத் திட்டங்கள், மற்றும் இதர நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பாரத்மாலா திட்டம் மற்றும் இதர திட்டங்களின் ஒரு பகுதியாக 35 பலவகை போக்குவரத்து தொகுப்புகளுக்கும் திட்டமிட்டுள்ளது. முக்கியமான எக்ஸ்பிரஸ் பாதைகளில் பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் பாதையும், சென்னை – சேலம் எக்ஸ்பிரஸ் பாதையும் அடங்கும்.
பாரத் மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 35 பலவகை பொருள் போக்குவரத்து திட்டங்கள் அமலாக்கத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் தொழில்துறை அமைப்பான சிப்காட் மூலம் தமிழ்நாடு அரசு ஆகியவை பங்களிப்புடன் மப்பேட்டில் அமையவிருக்கிறது.
“பிரதமரின் விரைவுசக்தி”யின் கீழ் நடைபெறும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மக்கள் அறிந்து கொள்ள கடந்த இரண்டு வாரங்களாக சமூக ஊடகங்கள் மூலம் சிறப்பு இயக்கத்தை அமைச்சகம் நடத்துகிறது. பசுமை எக்ஸ்பிரஸ் பாதைகள் பலவகை பொருள் போக்குவரத்து தொகுப்புகள், இழுவைரயில் பாதைகள் மற்றும் முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் பற்றி ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், கூ போன்ற சமூக ஊடகங்களில் மக்களுக்கு அமைச்சகம் தெரிவிக்கிறது.
–எம்.பிரபாகரன்