தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோதமாக தொடர்ந்து மீன்பிடியில் ஈடுபடுவதாக இலங்கை அரசாங்கமும், இலங்கை கடற்படையினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதோடு ; தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்களிடமிருந்து மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அவர்களிடமிருந்த பணத்தையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தருணங்களில் மட்டும் இப்பிரச்சனை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் பெரிதாக பேசப்படுவதும்; அதன் பிறகு இதை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடுவதும் இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது.
வெளிநாட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கையில் உள்ளூர் மீனவ சமூகத்துக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மேலும், இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை கேள்வி குறியாகி வருகிறது என்றும், அதனால் தான் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை கடற்படை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகிறது.
அப்படியானால், இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை மீறி (International Maritime Boundary Line- IMBL) இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லும் வரை, நமது இந்திய கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது?!
நம் நாட்டு மீனவர்கள் எல்லை மீறாமல் கண்காணித்து; கட்டுப்பாட்டுடன் நாம் பார்த்துக்கொண்டால், இதுபோன்ற பிரச்சனைகளையும், அவமானங்களையும் நாம் சந்திக்க வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்காது.
மேலும், முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களால் அவரது ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசுக்கு இலவசமாக தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை நாம் திரும்ப மீட்காத வரை, இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது.
Historic water boundary: India Sri Lanka
Maritime boundaries: India-Sri Lanka
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சதீவை இலங்கை நாட்டுக்கு, அளித்த விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அரசியல் சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படாமல் சட்டத் திட்டங்களை மீறி தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக, கடந்த 2008-ம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்தில் அப்போது தமிழ்நாட்டின் எதிர் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை காரணம்காட்டி; இப்பிரச்சனையை தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை.
முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்த விவகாரத்தில், கடந்த 1974-ம் ஆண்டில் பாரதீய ஜனசங்கம் தலைவராக இருந்த வாஜ்பாய் காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார் என்பதை இத்தருணத்தில் இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.
முந்தைய நிலைப்பாடு இவ்வாறு இருக்க, கச்சத்தீவு பிரச்சனை ஒரு முடிந்து போன விவகாரம் என்று மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எனவே, இந்திய அரசாங்கம் தமது ராஜ்ய உறவுகளை பயன்படுத்தி; கச்சத்தீவை மீட்பதற்கு இதுகுறித்து இலங்கை அரசாங்கத்திடம் முழுமனதுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைப்புக்காட்ட வேண்டும். அதற்கான இணக்கமான ஏற்ற சூழல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இப்போது விட்டால் இதற்கான வாய்ப்பு இனி எப்போதும் கிடைக்காது.
அரசியல் ஆதாயம் கருதியாவது கச்சத்தீவை மீட்பதற்கு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவு மட்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால், தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களின் கவலைகள் அனைத்தும் நிரந்தரமாக தீர்ந்து விடும். ஒட்டுமொத்த மீனவ மக்களும் நிம்மதி அடைவார்கள்.
அமைதிக்கான விலை எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை!-நாட்டு மக்களின் கண்ணீரை துடைப்பதும்; அவர்களை கண்ணியமாகவும், கௌரவமாகவும் வாழவைப்பதும்தான் ஒரு உண்மையான தலைவனின் முக்கிய கடமையாகும்.
இதை பாரத பிரதமர் நரேந்திர மோதி கவனத்தில் கொள்வாரா?
பொறுத்திருந்துப் பார்ப்போம்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com