எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை!
நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால், சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்?
இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும்.
யுக யுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
மகாத்மாக்கள் பலபேர் வருவார்கள் போவார்கள், ஆனால், நமது வாழ்க்கை நிலை அப்படியே தான் இருக்கிறது!
கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்!
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக பலியிடுவார்கள், சிங்கங்களை அல்ல. நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்!
கற்பி, ஓன்று சேர், புரட்சி செய்!
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!-இப்படி சொன்னவர் மட்டுமல்ல; இதற்காகவே இறுதி மூச்சு வரை போராடியவர்..!-ஆம், இவர் தான் அம்பேத்கர்!
இவரை பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்..!
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்!
உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்!
பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்!
பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர்!
பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் கை தேர்ந்தவர்!.
ஆசிரியராக, இதழாளராக, எழுத்தாளராக, சமூகநீதிப் போராளியாக இறுதி மூச்சு வரை புரட்சியாளராக விளங்கியவர்!
‘நவ புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்!
இவையாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்!
இவரது இறப்புக்குப் பின் 1990-ல் இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது கிடைக்கப்பெற்றவர்!
2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்!
–ஆம், இவர் தான் அம்பேத்கர்!
இப்போது மத்தியப் பிரதேசமாக இருக்கும்; அப்போதைய பிரித்தானிய இந்தியாவில், மாவ் எனுமிடத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில், மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில், இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோருக்கு 14-வது குழந்தையாக, 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ந்தேதி பிறந்தார்.
தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் இவர் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரர் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.
1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும்.
அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்டு அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.
1904 ஆம் ஆண்டு இவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து இளங்கலைப் பட்டதாரியானார்.
படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக ‘லெப்டினன்ட்’ பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார்.
மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915-ல் ‘பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், ‘இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் ‘இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.
இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் ‘பிரித்தானிய இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். ‘ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார்.
1930-ல் இலண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், ‘என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்று கூறிச் சென்றார்.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார்.
இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் ‘இரட்டை வாக்குரிமை” தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் காரணமாக புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் காந்தி அடைக்கப்பட்டார்.
காந்தியின் இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால், அம்பேத்கர்- காந்தியுடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டார்.
இதன் விளைவாக செப்டம்பர் 24 – 1932-ல் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக; பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.
வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் அம்பேத்கர் செயல்பட்டார். இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான ‘இந்து சட்டத் தொகுப்பு மசோதா’விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து, தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.
1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது.
1948-ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும், கண்பார்வை குறைந்ததாலும்,1954 ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை படுக்கையில் இருந்தார்.
அப்போது நாட்டில் நடந்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் அம்பேத்கரின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது.
‘புத்தரும் அவரின் தம்மாவும்’ என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு, அதாவது, 1956 டிசம்பர் 6 ந்தேதி டில்லியிலுள்ள அவரது இல்லத்தில் சமூக நீதிப் போராளி அம்பேத்கர் அவர்களின் உயிர் தூக்கத்தில் பிரிந்தது. உலகமே துக்கத்தில் ஆழ்ந்தது.
–Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
THE GREAT MAN Dr. AMBETHKAR 🙏