பிரதமர் நரேந்திர மோதி மே 28-ம் தேதி குஜராத் செல்கிறார். அன்று காலை 10 மணிக்கு, ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுஸ்ரீ கே.டி.பி. பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பார்வையிடும் பிரதமர் அங்கு நடைபெறவுள்ள பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு, காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில், பல்வேறு கூட்டுறவு நிறுவன தலைவர்களின் கருத்தரங்கில் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து காலோல் நகரின், இஃப்கோ ஆலையில் கட்டப்பட்டுள்ள நானோ யூரியா (திரவ) உரத் தொழிற்சாலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
காந்தி நகரில் பிரதமர்
குஜராத் மாநிலத்தின் கூட்டுறவுத்துறை நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுத் துறைகளுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. இந்த கூட்டுறவுத் துறையில் மாநிலத்தில் உள்ள 84,000க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. இதில் 231 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மாநிலத்தின் கூட்டுறவுத்துறையை வலுப்படுத்தும் விதமாக மகாத்மா மந்திரில், ‘சகஹர் கே சம்ரித்தி’ குறித்த பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், மாநிலத்தின் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தும் 7,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரித்து, அவர்களின் வருவாயை பெருக்கும் வகையில், காலோல் நகரின் இஃப்கோவில், ரூ175 கோடி செலவில் நானோ யூரியா திரவ உரத்தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. நானோ யூரியாவை பயன்படுத்துவதன் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிக்க செய்வதை கருத்தில் கொண்டு, அதிநவீன முறையில் உரத்தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலை, 500 மி.லி. கொள்ளளவு கொண்ட 1.5 லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும்.
ராஜ்கோட்டின் அட்கோட்டில் பிரதமர்
ராஜ்கோட்டின் அட்கோட்டில் கட்டப்பட்டுள்ள, மதுஸ்ரீ கே.டி.பி. பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை தரும் வகையில், உயர்தர மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கியதாக கட்டப்பட்டுள்ளது.
–திவாஹர்