மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பரம்பு கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான மீன்பிடி திருவிழா இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மேலூர், மேலவளவு, கொட்டாம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமான கிராம மக்கள் நள்ளிரவு முதலே இங்கு வந்திருந்தனர்.
இன்று அதிகாலை 6 மணி அளவில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத் துண்டு வீசிய உடன் சுற்றி கண்மாயை சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, குத்தா, வலை, கூடை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.
கண்மாயில் போட்டி போட்டு சிறுவர் முதல் பெரியவர் வரை பெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாக மீன் பிடித்தனர். இதில் கெண்டை, கெளுத்தி,வீரா, கட்லா உட்பட சிறியரகத்தில் இருந்து 3 கிலோ எடை வரையிலான மீன்கள் பிடிபட்டது.
கண்மாய்க்குள் இறங்கி மீன் பிடித்த அனைத்து மக்களுக்குமே மீன்கள் கிடைத்தது.மீன்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் தொடர்ந்து விவசாயம் செழிக்கும் என இப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
–சி.கார்த்திகேயன்