நெல்லை சந்திப்பில் உள்ள பழமைவாய்ந்த கைலாசநாதர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. 8ம் திருவிழாவான நேற்று காலை சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு பச்சை சாத்தி செப்பு சப்பரத்தில் வீதியுலா நடந்தது. மாலை பாரிவேட்டைக்கு குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார். தொடர்ந்து செப்பு சப்பரத்தில் சுவாமி கங்களாநாதர் வீதியுலா நடந்தது.
இரவு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதியுலா மற்றும் தேர் கடாட்சம் நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் 9 ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடக்கிறது. 10ம் திருவிழாவான நாளை (8ம் தேதி) கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும் அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறும்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
–கே.பி.சுகுமார்