புதுச்சேரி, காரைக்காலில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று (14ம் தேதி) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனால் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன்களின் இனவிருத்திக்காக மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி, கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை (61 நாட்கள்) தொடர்ந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட புதுச்சேரி மீன்வளத்துறை தடை விதித்திருந்தது.
இதனால் புதுச்சேரியில் கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரையிலும், காரைக்காலில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரை மற்றும் ஏனாம் மீன்பிடி துறைமுக பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் பாரம்பரிய மீன்பிடி விசைப்படகுகள்கடற்கரை பகுதிகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
–எஸ்.திவ்யா