பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டருக்க தங்கப் பதக்கம் கிடைத்தது.
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தேசிய சாதனை படைந்திருந்தார்.
பின்லாந்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் பழைய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நீரஜ் சோப்ரா தற்போதுதான் பின்லாந்து போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
–திவாஹர்