உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் குரங்கு அம்மை என்னும் நோய் உலக நாடுகளில் பரவலாக பரவி வருகிறது.
ஆப்பிரிக்கா நாட்டில் முதன் முறையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 39 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளதாகவும், இதுவரை உலக நாடுகளில் 1600 குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாகவும், 72 பேர் இதுவரை குரங்கு அம்மை நோய்க்கு உலகம் முழுவதும் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக ஜூன் 23 அன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியதாக உள்ளது. இதன் பாதிப்பு உலக அளவில் பொது சுகாதார அவரச நிலையை பிரதிபலிக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.
–எம்.பிரபாகரன்