8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, கர்நாடகாவின் மைசூரு அரண்மனையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார். பிரதமரின் உரை டிடி நேஷனல் மற்றும் டிடியின் பிற அலைவரிசைகளிலும் காலை 6.40 மணியிலிருந்து 7.00 மணி வரை நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
“75-வது ஆண்டு சுதந்திர தின அமிர்தப் பெருவிழா”வின் ஒருபகுதியாக, 75 முக்கிய இடங்களில் 8-வது சர்வதேச யோகா தினக்கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்ஒரு பகுதியாக, அயோத்தியின் ராம் கீ பைய்டிலும் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ், அயோத்தியாவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். உத்தரப்பிரதேச மாநில துணைமுதல்வர் திரு.கேஷவ் பிரசாத் மவுரியாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
சர்வதேச யோகா தினம் 75 முக்கிய இடங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், ‘இந்தியா மீதான உலகளாவிய பார்வை’யை மையப்படுத்துவதாகவும் அமையும்.
முதல் சர்வதேச யோகா தினம் 2015-ம் ஆண்டு ஜூன் 21 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்துக்கான தீர்மானத்துக்கு, 2014 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கியது. 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
–திவாஹர்