நாட்டில் உள்ள 75% குடியிருப்புகளுக்கு, அடுத்த சில ஆண்டுகளுக்குள் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம், பானிப்பட்டில் அதிநவீன எத்தனால் உற்பத்தி நிலையத்தை காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்து அவர் பேசினார்.
வேளாண் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க எத்தனால் உற்பத்தி நிலையம் உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.வேளாண் கழிவுகள் மூலமும், விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த எட்டாண்டுகளுக்கு முன்னர் எத்தனால் உற்பத்தி நாளொன்றுக்கு 40 கோடி லிட்டராக இருந்ததாக தெரிவித்த அவர், தற்போது இது நாளொன்று 400 கோடி லிட்டர் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு குறைந்துள்ளதாகவும், இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த தொகை விவசாயிகள் நலனுக்காக செலவிடப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கம் தொடர்பான நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.நமது தேசியக் கொடி பன்முகத்தன்மையின் சின்னம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நமது கடந்த காலத்தின் பெருமையையும், நிகழ்காலத்திற்கான அர்ப்பணிப்புகளையும், எதிர்காலத்திற்கான கனவுகளையும் தேசியக் கொடி பிரதிபலிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்