கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்: ஈரப்பத விதியை தளர்த்தி கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .

காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு வந்துள்ள நெல் மணிகள் நனைந்து ஈரமாகியுள்ளன. அதனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் அதிகரித்திருப்பதால், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ய முடியாத நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டில் வழக்கத்தை விட முன்பாகவே இந்த ஆண்டு மே மாதம் 24&ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரி பாசன மாவட்டங்களில் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. முன்கூட்டியே சாகுபடி தொடங்கியதால் அறுவடையும் முன்கூட்டியே தொடங்கி விட்டது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே கொள்முதலை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்ததால் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் தொடங்கியுள்ளது. இதுவரை அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் பருவம் தவறிய மழை தான் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை விடை பெற்று விட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள சூழலில், தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் பெய்வதைப் போலவே காவிரி பாசன மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் மழையால் நெல் நனைந்து ஈரமாகிறது.

மழையில் நனைந்து ஈரமான நெல்லை உழவர்கள் பகல் நேரத்தில் சாலையில் காய வைக்கின்றனர். ஆனால், இரவு நேரத்தில் மீண்டும் பெய்யும் மழை அல்லது பனியால் நெல் மீண்டும் ஈரப்பதமாகி விடுகிறது. கடந்த சில நாட்களாக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் இரவில் நனைவதும், பகலில் காய்வதுமாக உள்ளது. ஆனாலும், நெல்லின் ஈரப்பதம் குறையாததால் அந்த நெல்லை பல நாட்களாக விவசாயிகளால் விற்பனை செய்ய முடியவில்லை. அதனால், கடந்த பல நாட்களாக வீடுகளுக்கு செல்ல முடியாமல் கொள்முதல் நிலையங்களிலேயே காத்துக் கிடக்கின்றனர்.

மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். ஆனால், இப்போது மழையில் நனைந்த நெல்களின் ஈரப்பதம் 22 முதல் 25% வரை உள்ளது. இவ்வளவு ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு தன்னிச்சையாக கொள்முதல் செய்ய முடியாது. மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டும் தான் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முடியாது. இது தான் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு காரணமாகும்.

கடந்த ஆண்டில் இதே போன்ற சூழல் உருவானது. அப்போது தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், 21% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இப்போது மத்திய அரசிடம் விண்ணப்பித்து 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய முடியும். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. விவசாயிகளின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தீபஒளி திருநாளுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள்ளாக நெல் மூட்டைகளை அவர்கள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால் மட்டும் தான் அவர்களால் தீபஒளிக்கான தேவைகளை நிறைவேற்றி கொண்டாட முடியும். ஆனால், ஈரப்பதத்தின் அளவை அதிகரித்து நெல்லை கொள்முதல் செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச தமிழக அரசு அதிகாரிகள் குழு விரைவில் தில்லி செல்லும் என்று உணவு அமைச்சர் அறிவித்தும் கூட அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மற்றொருபக்கம் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாததால் பல ஊர்களில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த விஷயத்தில் தாமதிக்கப்படும் ஒவ்வொரு மணி நேரமும் மிக நீண்ட காலமாகும். இந்த அவசரத்தையும், உழவர்களின் நலனையும் புரிந்து கொண்டு, மத்திய அரசின் அனுமதியை விரைவாகப் பெற்று ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply