நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்தி வெறி!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.

இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது.

ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளை அளித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் என்றே கருத வேண்டியுள்ளது.ஏனெனில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தி நாள்’ விழாவில் உரையாற்றியபோது, “ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தி மொழியை அனைத்து நிலைகளிலும் கட்டாயமாக்குவதுதான் பா.ஜ.க. அரசின் நோக்கம்” என்று அறிவித்தார். உள்துறை அமைச்சரின் இந்தித் திணிப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுமலர்ச்சி திமுக சார்பில் அக்டோபர் 6 ஆம் நாள் சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் துணைத் தலைவரான ஒடிசா பிஜூ ஜனதாதளத்தைச் சேர்ந்த பார்த்ருஹரிமஹ்தப், குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டிருக்கும் பரிந்துரை அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை குறித்து விளக்கி இருக்கிறார்.அதில், “தேசிய கல்விக் கொள்கை 2020 இன் படி, கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது மாநில மொழி இருக்க வேண்டும்” என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் பிரிவு ‘ஏ’ மாநிலங்களில் இந்தி மொழிக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும். அது நூறு விழுக்காடு பின்பற்றப்படவும் வேண்டும்;இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக் கழகங்கள், கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், பயிற்று மொழியாக உள்ள ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தி மொழியில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்திதான் இருக்க வேண்டும். பயிற்சி நிறுவனங்களிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட வேண்டும்.பணியாளர் தேர்வுகளுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வினாத் தாளில் ஆங்கில மொழியை அறவே நீக்கிவிட்டு, இந்தி மொழியில்தான் வினாத்தாள் இருக்க வேண்டும் என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும்.உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை இந்தியில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும்.

இந்தி பேசுகின்ற மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இந்தி மொழியில் பேசவும், எழுதவும் தெரியவில்லையெனில் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணியாளர்களின் பணி குறித்த மதிப்பீட்டு ஆண்டறிக்கையில் இதனைப் பதிவு செய்திட வேண்டும். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்களின் துறை சார்ந்த கடிதப் போக்குவரத்து, தொலைநகல், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியிலும், தேவைப்பட்டால் மாநில மொழிகளிலும் இருக்க வேண்டும். இவற்றில் ஆங்கில மொழியின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களான பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகங்களில் தற்போது இந்தி மொழி 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இக்கல்வி நிறுவனங்களில் நூறு விழுக்காடு இந்திதான் பயன்படுத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 37 ஆவது கூட்டத்திற்குப் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, “ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி” என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். இல்லையெனில் மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்.எனவே ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply