தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் பாதிப்பில் இருந்து சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மக்களை பாதுகாக்க வேண்டிய அவசிய அவசர சூழல் ஏற்பட்டுள்ளது . குறிப்பாக சென்னையில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அதாவது பருவமழையின் போது மழையின் பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியாத நிலை உருவாகும் . அரசுக்கும் , பொது மக்களுக்கும் மழை குறித்த வானிலை ஆய்வு மைய அறிவிப்பு பயனுள்ளதாக இருந்தாலும் இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொது மக்களைப் பாதுகாப்பதில் அரசுக்குத் தான் முதன்மையான பணி இருக்கிறது .
தமிழக ஆட்சியாளர்களும் , பொது மக்களும் மழையினால் என்னென்ன பாதிப்புகளை , பிரச்சனைகளை , சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கடந்த கால அனுபவங்கள் மூலம் அறிவார்கள் . இருப்பினும் மழையின் பாதிப்பினால் தொடரும் விளைவுகளை பொது மக்கள் சந்திக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுவதை அரசு முன்கூட்டியே கவனத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும் . இந்த ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை பெய்ய தொடங்கிவிட்டது . சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் கனமழை பெய்வதால் சாலைப்போக்குவரத்தில் இடையூறு , தடங்கல் , பொது மக்களுக்கு போக்குவரத்தில் பாதிப்பு . வீடு இடிந்து விழுவது , உயிர்பலி என பல்வேறு பிரச்சனைகளுக்கு பொது மக்கள் ஆளாகும்போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது .
முக்கியமாக வாகன ஓட்டிகள் மழையினால் சிரமத்திற்கு உட்படுகிறார்கள் . இதற்கு காரணம் சாலைப்போக்குவரத்துக்கான பாதைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை . வாகன ஓட்டிகளின் போக்குவரத்துக்கு ஏற்ப காவல்துறையினரின் பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது . உள்ள பிரச்சனைகள் , பாதிப்புகள் நீடிப்பது பருவமழைக் காலங்களில் சாலைப்போக்குவரத்தில் வாகன ஓட்டிகளுக்கான சிரமம் உட்பட பல்வேறு தொடரக்கூடாது என்பதற்காக அரசால் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணி என்பது எந்த அளவுக்கு பயன் தருகிறது என்றால் கேள்விக்குறி தான் . தற்போதைய மழைக்கு உடனடி தேவை தமிழக அரசு , வடிகால் பணி முடியாமல் இருக்கும் இடங்களில் பணிகளை விரைந்து முடிக்கவும் , தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் .
எனவே தமிழக அரசு , வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் இவ்வேளையில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் மழையினால் பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கேற்ப அவசர , அவசிய , உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழக மக்களை மழையின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் .
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சி.கார்த்திகேயன்