தொடர் கனமழையினால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழகத்தில் சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , கடலூர் , நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத்தெரிகிறது . நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்தும் , வீடு இடிந்தும் , சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்த வாகனங்கள் தடுமாறியும் பொது மக்கள் பாதிக்கப்பட்டு , உயிரிழப்பும் ஏற்பட்டது . தற்போதைய மழையால் , ஏழை , எளிய மக்கள் தான் பெருமளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் . ஏன் இக்கனமழையால் அனைத்து தரப்பு மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள் . குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது . சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆறு , ஏரி , குளம் , குட்டை என பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிந்தோடும் நிலை ஏற்படும் . மேலும் பல இடங்களில் மழைநீரானது முழுங்கால் அளவுக்கு தேங்கி நிற்கின்றன . தண்ணீரில் மூழ்கிய சாலைகளையும் , அரசு பேருந்து பாலத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு சென்றதையும் , குடிநீரும் , கழிவுநீரும் கலந்து செல்வதையும் பத்திரிக்கைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம் .

இச்சூழலில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணி மிக , மிக அவரச அவசியப் பணியாக இருக்கிறது . மழைநீர் வடிகால் பணி சரியாக , முறையாக காலத்தே தொடங்கப்பட்டு , காலத்தே சரியாக முடிக்கபட்டிருந்தால் மழைநீர் தேக்கம் , வெள்ளம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவுக்கு குறையும் . இருப்பினும் சென்னை மாநகராட்சியும் , மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் , பொதுப்பணித்துறையும் , மின்சாரத்துறையும் அவசரகால நடவடிக்கையாக பணிகளை மேற்கொண்டு மழையினால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் .

அது மட்டுமல்ல மழைக்காலப் பிரச்சனைகளை சரிசெய்வதற்கு தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பணியும் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . தற்போது பெய்து வரும் மழையினால் தாழ்வான பகுதி மக்களும் , ஏழை , எளிய மக்களும் பாதிக்காமல் இருப்பதற்கு அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்து , உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கொடுக்க வேண்டும் . அதே போல மேடான பகுதிகளில் வாழும் மக்களும் மழையால் பாதிக்ககூடிய சூழல் உருவாகும் என்பதால் அப்பகுதி வாழ் மக்களின் பாதுகாக்கும் பணிகள் தேவை . நேற்று , இன்று , நாளை -எனத்தொடங்கும் மழையானது அதி கனமழையானால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்படுவதோடு , அதிக அளவிற்கு பாதிப்பபையும் ஏற்படுத்தக்கூடும் .

எனவே இயல்பு நிலை திரும்பும் வரை பொது மக்களைப் பாதுகாக்க , தமிழக அரசும் அது சார்ந்த பல்வேறு துறைகளும் விழிப்புடன் செயல்பட்டு மக்களின் சிரமமில்லா , பாதுகாப்பான வாழ்க்கைப் பயணத்திற்கு துணை நிற்க மழைக்காலம் முடியும் வரை 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply