தமிழகத்தில் ஆவின் நிறுவனம் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலையை உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல . குறிப்பாக ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ . 12 உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது . இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களுக்கு பயன் தர வேண்டும் என்பது சரியானது . அதே சமயம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் கருதி பால் விலையை உயர்த்தாமல் இருந்தால் தான் சாதாரண ஏழை . எளிய , நடுத்தர மக்களுக்கு பயன் தரும் .
பால் கொள்முதல் விலை உயர்வால் , ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல் , விற்பனையில் ஏற்படும் செலவை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும் . அதாவது கொள்முதல் விலையை ஈடு செய்ய மாற்று வழியில் பொருளாதாரத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர அன்றாட அத்தியாவசிய தேவையாக இருக்கின்ற பால் விலையை உயர்த்தக்கூடாது .
பால் கொள்முதல் விலை உயர்வைக் காரணம் காட்டி பால் விற்பனை விலையை உயர்த்துவது சந்தர்ப்பவாதம் . தமிழகத்தில் தி.மு.க. வினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு அறிவிப்புகளை , தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த ஒன்றில் பால் விலை குறைக்கப்படும் என்று . இப்போது திடீரென்று ஆவின் பால் விலையை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு . இது கொடுத்த வாக்குறுதியை மீறும் செயலாக அமைந்திருக்கிறது . குறிப்பாக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விட்டு , இப்போது பால் விலை லிட்டருக்கு ரூ . 12 உயர்த்தப்படும் என்ற அறிவிப்பால் பொது மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் .
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு , மின் கட்டணம் உயர்வு தொடர்ந்து தற்போது பால் விலை உயர்வு தான் தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் . இச்செயல்பாடுகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் . குறிப்பாக தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்தவற்றில் தொடர்ந்து விலையேற்றம் இருப்பதால் ஏழை , எளிய மக்கள் தான் தொடர்ந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் .
எனவே தமிழக அரசு , உயர்த்தியிருக்கும் ஆவின் பால் பாக்கெட் விலையை உடனடியாக திரும்ப பெற முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன் .
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா