எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி 95ஆவது பகுதி, நாம் மிக விரைவாக மனதின் குரலின் சதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி என்னைப் பொறுத்த மட்டில் 130 கோடி நாட்டுமக்களையும் இணைக்கின்ற, மேலும் ஒரு கருவியாகும். ஒவ்வொரு பகுதிக்கு முன்பாகவும், கிராமங்கள்-நகரங்களிலிருந்து வந்திருக்கும் ஏராளமான கடிதங்களையும் படிப்பது, சிறுவர்கள் முதல் பெரியோர் வரையிலானவர்களிடமிருந்து வந்திருக்கும் ஒலிவழிச் செய்திகளைக் கேட்பது என்பது ஒரு ஆன்மீக அனுபவமாகவே எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, இன்றைய நிகழ்ச்சியை ஒரு அருமையான பரிசோடு நான் தொடங்க விரும்புகிறேன். தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளிச் சகோதரர் தாம் எல்தீ ஹரிபிரசாத் காரு. இவர் ஜி-20 மாநாட்டிற்கான சின்னத்தைத் தனது கைகளாலேயே நெய்து எனக்கு அனுப்பியிருந்தார். இந்த அருமையான பரிசைக் கண்டவுடன் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். ஹரிபிரசாத் அவர்கள் தனது கலையில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்றால், அவரால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட முடிகிறது. ஹரிபிரசாத் அவர்களின் கைகளால் நெய்யப்பட்ட ஜி-20இன் இந்தச் சின்னத்தோடு எனக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார். அடுத்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டிலே அதை அரங்கேற்றுவது என்பது நமக்கு மிகவும் பெருமிதம் வாய்ந்த ஒன்று. தேசத்தின் இந்தச் சாதனை தொடர்பான மகிழ்ச்சியில் ஜி-20க்கான இந்தச் சின்னத்தைத் தனது கரங்களாலேயே தயார் செய்திருக்கிறார். அற்புதமான இந்த நெசவுக் கலை இவரது தந்தையாரிடமிருந்து பாரம்பரியமாகக் கிடைத்திருக்கிறது, இன்று முழு ஆர்வத்தோடு இதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் இவர்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக ஜி-20ற்கான சின்னம், பாரதத்தின் தலைமை ஆகியவை தொடர்பான இணையத்தளத்தைத் தொடங்கி வைக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. பொதுப் போட்டி வாயிலாக இந்தச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஹரிபிரசாத் காரு அனுப்பிய பரிசு எனக்குக் கிடைத்த போது, என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. தெலங்கானாவின் ஏதோ ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபரும் கூட, ஜி-20 உச்சி மாநாட்டோடு எந்த அளவுக்குத் தான் தொடர்பு கொண்டிருப்பதாக உணர்கிறார் என்பதைப் பார்க்கும் போது என் மனது இனித்தது. இன்று, இத்தனை பெரிய மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டில் அதை நடத்துவது என்பதை நினைக்கும் போது, தங்கள் நெஞ்சங்கள் பெருமிதத்தால் நிமிர்கின்றன என்று ஹரிபிரசாத் காருவைப் போன்ற பலர் எழுதியிருக்கிறார்கள். புணேயில் வசிக்கும் சுப்பா ராவ் சில்லாரா அவர்கள், கோல்கத்தாவைச் சேர்ந்த துஷார் ஜக்மோஹன் அவர்கள் அனுப்பியிருக்கும் செய்திகளை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் ஜி-20 மாநாடு தொடர்பான பாரதத்தின் செயலூக்கம் மிக்க முயற்சிகளைப் பாராட்டியிருக்கிறார்கள்.
எம்.பிரபாகரன்