நமது கைவினைஞர்கள் உலக அளவில் இந்திய பாரம்பரியத்தின் தூதர்களாக திகழ்கின்றனர் என குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் அவர் உரையாற்றினார்.
இந்தியாவின் எழுச்சி முன் எப்போதும் காணாதது. உலக அளவில் முதலீடுகளை செய்வதற்கு உகந்த இடமாக அது உள்ளது. கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் தொடர்புடைய கைவினைஞர்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று திரு தன்கர் கூறினார். கலைஞர்களின் திறன்கள் குறித்து பேசிய அவர், அத்தகைய அரிய திறன்கள் இந்தியாவை பெருமிதம் கொள்ள வைப்பதாகத் தெரிவித்தார்.
கைவினைஞர்கள் நமது கலாச்சாரத்தின் சின்னமாக திகழ்கின்றனர் என்றும், இந்தியா, அளவில்லாத திறன்களைக் கொண்டுள்ளது என அவர்கள் உலகிற்கு பறைசாற்றுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
2017, 2018, 2019 ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் சிறந்த கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டன. பெருந்தொற்றுக் காரணமாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகள் முன்பு ரத்து செய்யப்பட்டிருந்தன.
ஜி-20 அமைப்பின் தலைமைத்துவம், பிரதமரின் தொலைநோக்கை உலகம் கவனிப்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளதென திரு தன்கர் தெரிவித்தார். இந்த தசாப்தத்தின் முடிவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் உருவெடுக்கும் என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஜவுளி, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், கைவினை கைத்தறி தற்சார்பின் முக்கியத் தூண் என்றும் உலக நாடுகளுடன் இந்தியா போட்டியிடும் நம்பிக்கையை அது வழங்குகிறது என்றும் கூறினார்.
நூற்றாண்டு காலமாக நமது கைவினை கலைஞர்கள் தனித்துவமான முறைகளை சொந்தமாக உருவாக்கி தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி, கற்கள், உலோகம், சந்தனமரம், களிமண் போன்றவற்றை மக்களின் வாழ்க்கையில் சேர்த்து வந்துள்ளதாக அவர் கூறினார். அவர்கள் மிகச் சரியான அறிவியல் மற்றும் பொறியியல் நடைமுறைகளை நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கையாண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கைவினைப் பொருட்களின் உற்பத்தி கிராமப்பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமரின் தொலைநோக்குக் காரணமாக 2047ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் போது நாடு நிச்சயம் வளர்ந்த, முன்னேற்றமடைந்த நாடாக உருவெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கைவினைப் பொருட்கள் மேம்பாடு, பாரம்பரிய விழுமியங்களுடன் நாட்டின் சமகால சமன்பாட்டை உறுதி செய்வதுடன், திறன் மிகுந்த கலைஞர்களுக்கு ஆதாரமாகவும் திகழும் என்று அவர் கூறினார். நாட்டின் கைவினைப் பொருட்கள், கைத்தறி உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாகவும் மற்ற நாடுகளின் பொருட்களைவிட நமது உற்பத்திப் பொருட்கள் நீடித்து நிலைக்கக் கூடியது என்று அமைச்சர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்