புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 41-வது சர்வதேச வர்த்தக கண்காட்சி 2022-ல் மக்கள் தொடர்பு மற்றும் பொது மக்களை சென்றடைதலில் தனிச்சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அரங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது. நவம்பர் 14-ந் தேதி தொடங்கிய இந்த வர்த்தக கண்காட்சியில் சுகாதார அமைச்சகத்தின் அரங்கம் பலரை வெகுவாக ஈர்த்தது. இந்த அரங்கத்திற்கு தினமும் அதிகளவிலான மக்கள் வந்து சென்றனர்.
இந்த சுகாதார அமைச்சகத்தின் அரங்கம் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தகவல்கள், சுகாதாரப்பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றுடன், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உயிர்காக்கும் நடைமுறைகளையும் விளக்கும் வகையில் அமைந்திருந்தது. 37,887 விசாரணை தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் இந்த அரங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரத்த அழுத்தம் தொடர்பான 4,490 பரிசோதனைகளும், ரத்த சர்க்கரை அளவு தொடர்பான 4,356 பரிசோதனைகளும் இந்த அரங்கில் மேற்கொள்ளப்பட்டன. 1110 பேருக்கு இந்த அரங்கத்தின் மூலம் ஆயுஷ் பாரத் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2920 பேருக்கு காசநோய் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உயிர்காக்கும் திறன்கள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2616 பேருக்கு கண் பரிசோதனையும், 2321 பேருக்கு பல் மற்றும் வாய் தொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இதன் மூலம் பயடைந்துள்ளனர். சுமார் 2000 பேருக்கு இயன்முறை சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளும், 2000 பேருக்கு ரத்த சோகை பரிசோதனையும் அது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. 441 பேருக்கு எச்ஐவி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காசநோய் தடுப்பு, புகையிலை ஒழிப்பு, தொற்றாநோய்கள் தடுப்பு போன்றவை தொடர்பான தகவல்களை மக்களுக்கு அதிகளவில் வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சகம் வினாடி-வினா போட்டிகளையும் நடத்தியது. குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி உள்ளிட்டவையும் நடைபெற்றன. ஆரோக்கியமான உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாசை தடுப்பது போன்றவை தொடர்பாகவும், குழந்தைகளுக்கு வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
காற்றுமாசு மற்றும் ஆரோக்கியத்தில் அது செலுத்தும் தாக்கம், உறுப்பு தானம், சுகாதார சேவைகளில் செவிலியர்களின் பங்கு, தொற்றாநோய்கள், ரோபோடிக் அறுவை சிகிச்சையால் ஏற்படும் பலன்கள் உள்ளிட்டவை குறித்து புகழ்பெற்ற மருத்துவர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
எம்.பிரபாகரன்