தமிழக அரசு , மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கின்ற வேளையில் மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதில் பாதிக்கப்படக்கூடாது , இந்த இணைப்பினால் இலவச மின்சாரம் பெறுவோர் , மானிய விலையில் மின்சாரம் பெறுவோர் உள்ளிட்ட அனைத்து பயனாளர்களும் முழுமையாக பயன்பெற வேண்டும் .
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது .
ஆனால் நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களையும் , நுகர்வோரின் வேலை சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டால் சிறப்பு முகாம்கள் நடைபெறும் கால அவகாசம் போதுமானதல்ல . காரணம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் , 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் , 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றது .
எனவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வெளியிட்ட கால அவகாசமான டிசம்பர் 31 ஆம் தேதியை மேலும் நீட்டித்து , குறைந்த பட்சம் 2023 – பிப்ரவரி மாதம் வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்திட அறிவிப்பு வெளியிட வேண்டும் . அது மட்டுமல்ல , மின் இணைப்பில் உள்ள மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலும் சரிசெய்யப்பட வேண்டும் , மின்சார திருட்டு முறியடிக்கப்பட வேண்டும் , மின்வாரியத்துக்கு இழப்பீடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவற்றிற்கெல்லாம் தமிழக அரசு , தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பொது மக்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தாமல் , மின்வாரியத்தை இலாபத்தில் இயக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் .
எனவே தமிழக அரசும் , மின்வாரியமும் தமிழக மக்களுக்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு சிறப்பு முகாம்களை குறைந்த பட்சம் 3 மாத காலத்திற்கு நீட்டித்து , தொடர்ந்து இலவச மின்சாரம் கிடைப்பதையும் , மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் .
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்