பொறியியல் கல்லூரியில் எந்த ஆசிரியரும் தமிழ்ப் பாடம் நடத்த அனுமதிக்கலாமா? இதுவா தமிழுக்கு செய்யும் மரியாதை?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, தன்னாட்சி பெறாத, பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான முதல் இரு பருவங்களில் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அண்ணா பல்கலை. அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழறிஞர்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்று நடப்பாண்டு முதல் இளநிலை பொறியியல் படிப்பில் முதலாமாண்டின் முதல் பருவத்தில் தமிழர் மரபு என்ற பாடமும், இரண்டாவது பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடமும் நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய முடியும்; தமிழை ஒரு பாடமாக படிக்காமல் கல்லூரிப் படிப்பை படிக்க முடியும் என்ற நிலை தமிழகத்தில் இன்றும் நிலவுகிறது. இத்தகைய சூழலில் இனி எவரும் தமிழை ஒரு பாடமாக படிக்காமல் பொறியியல் படிப்பை நிறைவு செய்ய முடியாது என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தை தமிழ் இலக்கியத்தில் உரிய தகுதி பெற்ற ஆசிரியர் நடத்தலாம்; இல்லாவிட்டால், பள்ளியில் தமிழை ஒரு பாடமாக படித்த பொறியியல்/தொழில்நுட்பம்/ அறிவியல் மற்றும் மானுடவியல் பேராசிரியர்களும் தமிழ்ப்பாடத்தை நடத்தலாம் என்று அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது; தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும்.

தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடங்களை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களும், 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான தமிழ்ப் பாடங்களை தமிழிலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் தான் நடத்த முடியும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்துபவர்கள் தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். வேறு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் தமிழ் இலக்கியத்தில் உயர்கல்வி கற்றிருந்தாலும் கூட, அவர்களால் எந்த வகுப்புக்கும் தமிழை கற்பிக்க முடியாது என்று தமிழக அரசே விதிகளை வகுத்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது பள்ளியில் தமிழை ஒரு பாடமாக படித்த ஒருவர், வேறு பாடத்திற்கான பேராசிரியராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ்ப்பாடத்தை நடத்த அனுமதிப்பது எப்படி சரியாக இருக்கும்?

உயர்கல்வியில் கற்பிக்கப்படும் எந்த பாடத்தையும் விட தமிழ் மொழிப்பாடம் மிகவும் நுணுக்கமானது. பல ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு வரையிலோ, 12&ஆம் வகுப்பு வரையிலோ தமிழை படித்ததை வைத்துக் கொண்டு பட்டப்படிப்பு நிலையிலான தமிழ்ப் பாடத்தை கற்பிக்கச் செய்து விட முடியும் என்று நினைப்பதே தமிழை குறைத்து மதிப்பிடும் செயலாகும். இப்படி ஒரு முடிவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எவ்வாறு வந்தது? இத்தகைய முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே தமிழறிஞர்களுடனோ, தமிழ்த்துறை பேராசிரியர்களுடனோ கலந்தாய்வு நடத்தப்பட்டதா? என்பது குறித்து பல்கலை. விளக்கமளிக்க வேண்டும்.

அதேபோல், பொறியியல் படிப்பில் ஒவ்வொரு பருவத்திலும் 15 பாடவேளைகள் மட்டும் தான் தமிழ் கற்பிக்கப்படும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனையாகும். ஒரு பருவத்திற்கு 90 பணிநாட்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது 45 பாடவேளைகள் ஒதுக்கப்படுகின்றன. அதேபோல், தமிழுக்கும் குறைந்தது 45 பாடவேளைகள் ஒதுக்கப்பட வேண்டும். மாறாக, வெறும் 15 பாடவேளைகளில் தமிழர் மரபு பாடத்தின் ஒரு பகுதியைக் கூட முழுமையாக கற்றுத்தர முடியாது என்பதே உண்மை.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதன் நோக்கம் தமிழ் வளர்ச்சி தான். கலை அறிவியல் கல்லூரிகளில் பருவத்திற்கு 45 பாட வேளைகள் தமிழ் கற்பிக்கப்படும் நிலையில், பொறியியல் படிப்புகளுக்கு 15 பாடவேளைகள் மட்டும் தமிழ் கற்றுத்தரப்படுவது போதுமானதாக இராது. இது தமிழை வளர்க்கும் முயற்சியாக பார்க்கப்படாது. மாறாக, பெயரளவில் தமிழ் கற்பிப்பதாகவே பார்க்கப்படும். அதற்கு பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடத்தை கற்பிக்காமலேயே விட்டு விடலாம்.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், தகுதியான தமிழ்ப் பேராசிரியர்களைக் கொண்டு தான் தமிழ்ப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான எண்ணிக்கையில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொரு பருவத்திலும் தமிழுக்கு 45 பாடவேளைகளை ஒதுக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில் இரண்டாம் ஆண்டிலும் தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்பட வேண்டும். தமிழ்ப் பாடங்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய திட்டங்கள் மூலம் பொறியியல் மாணவர்களின் தமிழறிவை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply